Published:Updated:

`4 கார், 4 செல்போன், டைரி;15 ஆண்டுகள்!’- தஞ்சையில் சிக்கிய பாலியல் தொழில் கும்பல்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ( ஆர்.வெங்கடேஷ் )

`இந்தப் பாலியல் கும்பலுக்கு என ரெகுலர் கஸ்டமர்கள் பலர் உள்ளனர். அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கஸ்டமர்களாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ராஜத்திடம் சுமார் 1,000 கஸ்டமர்களின் செல் நம்பர்கள் உள்ளன’.

தஞ்சாவூர் வடமாநிலப் பெண் விவகாரத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கணவன் மனைவி உட்பட 5 பேரை ஏற்கெனவே கைது செய்த எஸ்.பி தனிப்படையிலான போலீஸார் நேற்று இரவு அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து 4 கார்கள், 3 இரு சக்கர வாகனம், 4 செல்போன், ஒரு டைரி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சையின் பல பகுதிகளில் சுமார் 7 வீடுகளை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்

தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டி பகுதிக்குக் கடந்த 1ம் தேதி காரில் வந்த சிலர் 20 வயது மதிக்கத்தக்க வடமாநில இளம்பெண் ஒருவரை கீழே தள்ளி விட்டுச் சென்றனர். இதைக் கவனித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டதுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்திப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பாலியல் தொழிலிலும் ஈடுபட வைத்தனர் என அந்தப் பெண் புகார் கூறியதுடன் மேலும் 3 இளம் பெண்கள் நான் இருந்த வீட்டில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மூன்று பெண்களையும் காப்பாற்ற வேண்டும் எனவும் மாதர் சங்கத்தினர் கூறி வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட டூ வீலர்
பறிமுதல் செய்யப்பட்ட டூ வீலர்

இதையடுத்து, தஞ்சை சர டி.ஐ.ஜி லோகநாதன், எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. எஸ்.பியின் தனிப்படைக் காவல் உதவி ஆய்வாளரான கண்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாகச் சொல்லப்பட்ட தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் (49) அவரது இரண்டாவது மனைவி ராஜம் (47), லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ராமச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி உள்ளிட்ட 5 பேரை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள நடராஜபுரம் காலனியில் பதுங்கியிருந்தபோது கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செந்தில்குமார் ராஜம் உள்ளிட்டவர்கள்
கைது செய்யப்பட்ட செந்தில்குமார் ராஜம் உள்ளிட்டவர்கள்
ஆர்.வெங்கடேஷ்

அதன் பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீஸார் தரப்பில் விசாரித்தோம். ``செந்தில்குமார், ராஜம் கடந்த 15 வருடங்களாகப் பல்வேறு மாநிலப் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். இதற்காக தஞ்சையின் பல பகுதிகளில் உரிமையாளர்கள் அருகில் இல்லாத வீடாகப் பார்த்து ஒத்தி மற்றும் வாடகைக்கு எடுத்துள்ளனர். இபோது விவரம் தெரியவர வீட்டு உரிமையாளர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.

சஸ்பெண்ட் சப் இஸ்பெக்டர் பிராபாகரன் இவர்களுக்கு மூளையாகச் செயல்பட்டதுடன் போலீஸ் பிரச்னை எதுவும் வராமல் பார்த்துக்கொண்டுள்ளார். ஒரு வேளை தகவல் எதுவும் கிடைத்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் ரைடுக்குச் சென்றால் அதற்குள் பெண்களை அந்த இடத்திலிருந்து தப்பிக்க வைத்து விடுவார். மேலும், யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஃபைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சொகுசு வீடு
சொகுசு வீடு

இந்தப் பாலியல் கும்பலுக்கு என ரெகுலர் கஸ்டமர்கள் பலர் உள்ளனர். அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கஸ்டமர்களாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ராஜத்திடம் சுமார் 1,000 கஸ்டமரிகளின் செல் நம்பர்கள் உள்ளன. தமிழ்ப் பெண்களை அதிகம் இவர்கள் பயன்படுத்தவில்லை. ஏன் என்றால், `மொழி தெரியாத பெண்களாக இருந்தால் கஸ்டமராக வருபவர்கள் யார் என்பது அந்தப் பெண்களுக்குத் தெரியாது. இதனால் கஸ்டமர்களுக்கும் பிரச்னை இருக்காது. நமக்கும் பிரச்னை வராது’ என்றே இந்த முறையைக் கையாண்டுள்ளனர்.

இவர்களுக்கு என வட மாநிலங்களில் பல புரோக்கர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலமாகத்தான் பெண்களை வரவழைப்பார்கள். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பகுதியைச் சுற்றியே வீடுகளைப் பிடித்து பாலியல் தொழிலைச் செய்து வந்துள்ளனர். மருத்துவக்கல்லூரி காவல் நிலையக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில்தான் இவை அதிகமாக நடந்துள்ளன. இவர்களிடம் தொடர்பிலில் இருந்த பல போலீஸார் தற்போது ஓய்வு பெற்று விட்டுச் சென்று விட்டாலும் அவர்களும் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்து வருகின்றனர்.

செந்தில்குமார் ராஜம்  வீடு
செந்தில்குமார் ராஜம் வீடு

நன்கு அறிமுகமான கஸ்டமராக இருந்தால் போன் செய்தால் பெண்களை வீட்டிற்கே அனுப்பிவைப்பார்கள். வெளிவிவகாரங்களை செந்தில்குமார் கவனித்துக்கொள்ள, ராஜம் யார் யார் கஸ்டமர் மற்றும் புதிய பெண்கள் வந்தால் அவர்களுக்குத் தெரியப்படுத்துவது உள்ளிட்டவற்றைக் கவனித்து வந்துள்ளார். விசாரணைக்கு என யார் வந்தாலும் தன்னுடைய பேச்சாலும் வசீகரத்தாலும் மேலும் தனக்கு நெருக்கமான போலீஸாரைக்கொண்டு அவர்களைத் தடுத்து விடுவார்.

இதனால்தான் பெரிய அளவில் இதுவரை சிக்காமல் பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யமே நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளனர். மேலவஸ்தாசாவடியில் உள்ள வீடு மட்டும் மூன்றரைக் கோடி மதிப்பு கொண்டது. அந்த வீட்டை சீல் வைத்துள்ளதுடன் உயர் ரக கார் உட்பட 4 கார்கள், 4 செல்போன்கள், 3 இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.

கார்கள்
கார்கள்

செல்போனை வைத்து ராஜம் யார் யாருடன் பேசியிருக்கிறார் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். அத்துடன் ஒரு டைரியில் தன்னுடைய கஸ்டமர்கள் நம்பரை எழுதி வைத்துள்ளார் ராஜம். அந்த டைரியும் சிக்கியுள்ளது அதைக்கொண்டும் விசாரணை செய்கிறோம். பாதிக்கப்பட்ட வட மாநிலப் பெண் சிகிச்சையில் இருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு மற்ற விவரங்கள் தெரியவரும்.

`சஸ்பெண்ட் எஸ்.ஐ; குண்டர் சட்டம்!’- வடமாநிலப் பெண் விவகாரத்தில் ரகசியம் காக்கும் தஞ்சை போலீஸ்

நேற்று இரவு அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தியதுடன் செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேரைக் கும்பகோணம் சிறையில் அடைத்துள்ளனர். ராஜம் திருச்சியில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு இருந்ததால்தான் சீக்கிரமே அந்தக் கும்பலைக் கைது செய்து உரிய விசாரணை நடத்த முடிந்தது. மேலும், தீவிரமான விசாரணை மேற்கொண்டு முற்றிலுமாக இதனை ஒழிக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு