Published:Updated:

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் - போலீஸ் தீவிர விசாரணை!

 பாலியல் புகார்
பாலியல் புகார்

பாலியல் புகாரில் சிக்கிய சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவரின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை கே.கே.நகரிலுள்ள பிரபல தனியார் பள்ளியான பி.எஸ்.பி.பி-யில் வணிகவியல்துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றிவருகிறார். இவர்மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் தரப்பில் பள்ளி குழுமத்தின் டீன் ஷீலா ராஜேந்திராவுக்கு கடந்த 23.5.2021-ல் புகார் மனு ஒன்று அனுப்பப்பட்டது. அந்தப் புகார் மனுவைத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பாடகி சின்மயி பதிவு செய்திருந்தார். மேலும், சில மாணவிகள் ராஜகோபாலனால் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கினர். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

தி.மு.க எம்.பி கனிமொழியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஓர் ஆசிரியர் மாணவர்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதைக் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று பதிவு செய்திருந்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, `ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் கண்ணியமாக உடையணிந்து பாடத்தை நடத்த வேண்டும். சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.

`நீ அழகாக இருக்கிறாய், சினிமாவுக்குப் போகலாமா' - பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர்மீது பாலியல் புகார்

இந்தச் சூழலில் தனியார் பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தன், குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை சஸ்பெண்ட் செய்தார். இதற்கிடையில் மடிப்பாக்கத்தில் குடியிருந்துவரும் ஆசிரியர் ராஜகோபாலனிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆசிரியர் பயன்படுத்திவந்த செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

பணியிடை நீக்கம் உத்தரவு
பணியிடை நீக்கம் உத்தரவு

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சமூக வலைதளத்தில் வெளியான புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்திவருகிறோம். அதைத் தொடர்ந்து ஆசிரியர்மீது குற்றம் சுமத்திய மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை நடந்துவருகிறது. மாணவிகள் தரப்பில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில், ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தப்படும். அதன் பிறகு சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு