Published:Updated:

புதுச்சேரி இளம்பெண்ணை கம்போடியா நாட்டில் விற்ற கும்பல்; ஏஜென்ட்டை வளைத்துப் பிடித்த சி.பி.சி.ஐ.டி

கைது

வெளிநாட்டு வேலை கேட்ட இளம்பெண்ணை கம்போடியா நாட்டில் விற்ற இந்திய ஏஜென்ட்டை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி.

புதுச்சேரி இளம்பெண்ணை கம்போடியா நாட்டில் விற்ற கும்பல்; ஏஜென்ட்டை வளைத்துப் பிடித்த சி.பி.சி.ஐ.டி

வெளிநாட்டு வேலை கேட்ட இளம்பெண்ணை கம்போடியா நாட்டில் விற்ற இந்திய ஏஜென்ட்டை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி.

Published:Updated:
கைது

புதுச்சேரியைச் சேர்ந்த 27 வயது பட்டதாரி இளம்பெண் ஒருவர், இணையத்தளம் மூலம் வெளிநாட்டில் வேலை தேடியுள்ளார். அப்போது கம்போடியாவில் தொலைபேசி அழைப்பாளர் பணிக்காக புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ஏஜென்ட் முருகன் என்பவரை நாடியுள்ளார். மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் என்று கூறிய முருகன், விசா உள்ளிட்ட பணிகளுக்காக ரூ3.25 லட்சம் கேட்டுள்ளார். சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு ஏஜென்ட் ராஜ்குமாரிடம் பேரம் பேசியபிறகு முருகனிடம் பணத்தை வழங்கினார் அந்த இளம்பெண்.

கைதுசெய்யப்பட்ட ராஜ்குமார் - முருகன்
கைதுசெய்யப்பட்ட ராஜ்குமார் - முருகன்

அதையடுத்து சுற்றுலா விசாவில் கம்போடியாவுக்குச் சென்ற அந்த இளம்பெண், ஏஜென்ட் முருகன் கூறிய தொலைபேசி அழைப்பாளர் பணி நிறுவனத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் அங்கு தொலைபேசி அழைப்பாளர் பணியைத் தவிர்த்து, தொலைபேசி மோசடி வேலைகளில் ஈடுபடுமாறு கூறியிருக்கின்றனர். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், கோபமடைந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆட்டிடோ, ஜான் உள்ளிட்ட சிலர், ”உன்னை ரூ2.76 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியிருக்கிறோம், நாங்கள் சொல்லும் வேலையை செய்யாவிட்டால் விபசார கும்பலிடம் விற்று விடுவோம்” என்று மிரட்டியுள்ளனர்.

அத்துடன் அவரை ஒரு அறையில் அடைத்து மின்சாரம் பாய்ச்சி துன்புறுத்தியதுடன், அவர் கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் வேறொரு இந்தியர் மூலம் அந்த கும்பலிடமிருந்து தப்பித்த அந்த இளம்பெண், புதுச்சேரிக்கு திரும்பினார். அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் டி.ஜி.பி மனோஜ்குமார் லாலை சந்தித்து புகார் தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், ஏஜென்ட் முருகனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சென்னையில் முகாமிட்ட தனிப்படை போலீஸார், தலைமை ஏஜென்ட்டான ராஜ்குமாரை தேடி வந்தனர்.

அதேநேரத்தில் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன், கம்போடியா நாட்டைச் சேர்ந்த கும்பல் குறித்த தகவல்களையும் சேகரித்தனர். இந்நிலையில் தலைமை ஏஜென்ட்டான ராஜ்குமார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பதுங்கியிருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சீருடை தவிர்த்து அங்கு சென்ற சி.பி.சி.ஐ.டி போலீஸார், பதுங்கியிருந்த ராஜ்குமாரை வளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல கம்போடியா நாட்டைச் சேர்ந்த ஆட்டிடோ, ஜான் இருவருக்கும் வலை விரித்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.