Published:Updated:

49 பேர் குற்றவாளிகள்; 35 பேர் விடுதலை!- ஏனாம் கலவர வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

ஏனாம் தனியார் டைல்ஸ் தொழிற்சாலை கலவர வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

தீர்ப்பு
தீர்ப்பு

புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில் செயல்பட்டு வந்த ரீஜென்சி செராமிக் தொழிற்சாலையில் மேலாளர்கள், தொழிலாளர்கள் என சுமார் 1,000 பேர் நேரடியாகவும் 2,000 பேர் மறைமுகமாகவும் பணியாற்றி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இங்கு ஏற்பட்ட தொழிலாளர் பிரச்னையில் தொழிற்சங்கத்தினருக்கும் ஏனாம் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஏனாம் கலவரம்
ஏனாம் கலவரம்

அதைத் தொடர்ந்து போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய தொழிற்சங்கத் தலைவர் முரளி மோகன்ராவை விசாரணைக்கு அழைத்துச் சென்றது காவல்துறை. விசாரணையின் போது முரளி மோகன்ராவ் உயிரிழந்ததால் கோபமடைந்த தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதைக் கட்டுப்படுத்தச் சென்ற காவல் துறையினருக்கும் தொழிலாளர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. தொழிற்சாலைக்குள் சென்ற போராட்டக்காரர்கள் அங்கிருந்த வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தி கட்டடங்களை அடித்து நொறுக்கியதோடு, காவல் நிலையத்தையும் சூறையாடினர்.

ரீஜென்சி தொழிற்சாலை
ரீஜென்சி தொழிற்சாலை

தொடர்ந்து ரீஜென்சி நிறுவனத்தின் பொதுமேலாளர் சந்திரசேகரின் வீட்டிற்குப் புகுந்து கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் அப்போது படுகாயமடைந்தனர்.

27.01.2012 அன்று நடந்த இந்தக் கலவரம் குறித்து ஏனாம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட நிலையில், வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள்
கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள்
அ.குரூஸ்தனம்

அதேபோல தொழிற்சாலை நிர்வாகத்துக்கு ஆதரவாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததாக விசாரணை அதிகாரியான ஆய்வாளர் பெரியசாமி மற்றும் உதவி ஆய்வாளர் வீரபத்ரசாமி ஆகியோரை சி.பி.ஐ கைது செய்து சிறையில் அடைத்தது.

Vikatan

தொடர்ந்து அவர்களை பணியிடை நீக்கம் செய்தது காவல்துறை தலைமை. கலவரம், தொழிற்சங்கத் தலைவர் சுரேந்திரமோகன் உயிரிழப்பு, தொழிற்சாலை பொது மேலாளர் சந்திரசேகர் கொலை, தனியார் நிறுவனத்தை சூறையாடியது எனத் தனித்தனியாக 5 வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்து விசாரித்தது. காவல் நிலையத்தைச் சூறையாடிய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 84 பேரும் புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.

கொலை செய்யப்பட்ட மேலாளர் சந்திரசேகர்
கொலை செய்யப்பட்ட மேலாளர் சந்திரசேகர்
அ.குரூஸ்தனம்

புதுச்சேரி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இதில், ஏனாம் காவல் நிலையம் தாக்கப்பட்ட வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் உறுதி செய்தது. அவர்களுக்குத் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதோடு, 35 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி தாமோதரன்.