Published:Updated:

`பிஸினஸ் சரியாப் போகலை!' - ரூ.2.5 கோடி நகைக் கொள்ளையில் அதிரவைத்த புதுச்சேரி அடகுக்கடை அதிபர்

நகை அடகுக்கடை
நகை அடகுக்கடை

ராகேஷ் குமார் ஜெயினுக்கு நன்கு அறிமுகமான நபர்களே சாவிகளை போலியாக தயாரித்து இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்று முடிவுக்கு வந்தது காவல்துறை.

புதுச்சேரி காமராஜர் நகர் 45 அடி ரோட்டில் வசிப்பவர் ராகேஷ் குமார் ஜெயின் வயது 55. தொழிலதிபரான இவர், திலாசுப்பேட்டை அய்யனார் கோயில் வீதியில் நகை அடகுக் கடையை நடத்திவருகிறார். நேற்றுமுன் தினம் இரவு 8 மணிக்கு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு ராகேஷ் குமார் ஜெயின் வீட்டுக்குச் சென்றார். பின்னர், வழக்கம்போல் நேற்று காலை கடையைத் திறந்தார். அப்போது அங்கிருந்த லாக்கர் திறந்து கிடந்ததோடு, அதிலிருந்த 8 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரூ.2.80 லட்சம் பணமும் காணாமல் போயிருந்ததாகக் கோரிமேடுக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த காவலர்களிடம், திலாசுபேட்டை கடை மட்டுமல்லாமல் புதுச்சேரியில் தனக்குச் சொந்தமான வேறு சில கடைகளில் வாடிக்கையாளர் அடகு வைத்திருந்த நகைகளையும் இங்கு வைத்ததாகவும், அவற்றின் மொத்த மதிப்பு 2.5 கோடி ரூபாய் என்றும் தெரிவித்தார்.

நகை அடகுக்கடை
நகை அடகுக்கடை

அதையடுத்து அந்தக் கடை முழுவதையும் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, கடையில் இருந்த வெளிப்புற ஷட்டர், உள்புறம் இருந்த 3 கதவுகள், லாக்கர் என மொத்தம் 15 பூட்டுகளையும் உடைக்காமல் கள்ளச்சாவி போட்டு திறந்தே நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஒரு பூட்டு கூட உடைக்கப்படவில்லை என்பதால் ராகேஷ் குமார் ஜெயினுக்கு நன்கு அறிமுகமான நபர்களே சாவிகளைப் போலியாகத் தயாரித்து இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்று முடிவுக்கு வந்தது காவல்துறை. 15 பூட்டுகளும் கள்ளச்சாவி போட்டே திறக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்துப் பூட்டுகளுக்கும் கள்ளச்சாவி போட முடியுமா? எப்படிப்பட்ட சாவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை வல்லுநர்களுடன் ஆலோசித்தனர் காவல்துறையினர்.

`சென்னையில் கொள்ளை; கோவாவில் தேனிலவு!'- திருமணமான ஒன்றரை மாதத்தில் சிக்கிய புதுமாப்பிள்ளை

அப்போது புதிய சாவிகளைப் போட்டு திறந்ததற்கான தடயங்கள் இல்லை என்றும் ஏற்கெனவே பழக்கப்பட்ட பழைய சாவிகளைத்தான் சுலபமாக போட்டுத் திறந்துள்ளனர் என்றும் வல்லுநர்கள் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், ராகேஷ் குமாருக்கு நன்கு தெரிந்த நபர்கள்தான் இந்தக் கைவரிசையில் இறங்கியிருக்கின்றனர் என்ற முடிவுக்கு வந்தனர். அதையடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய முயன்றபோது, கொள்ளையர்கள் அதன் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றிருந்ததால் குழப்பம் நீடித்தது. அதையடுத்து, அந்தப் பகுதியில் மற்ற வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதிலும் சந்தேகப்படும்படியான எந்த நபரும் வந்து சென்றதற்கான பதிவுகள் இல்லாததால், காவல்துறை தனது சந்தேகப்பார்வையைக் கடை உரிமையாளரான ராகேஷ் குமார் ஜெயின் மீது திருப்பியது.

நகை அடகுக்கடை
நகை அடகுக்கடை

காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்டவிசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததும், கடையில் கொள்ளை போனதை அறிந்தும் பொதுமக்கள் யாரும் அடகு கடைக்கோ அல்லது காவல்நிலையத்துக்கோ வந்து புகார் அளிக்காததும் காவல்துறையின் சந்தேக வளையம் சுருங்கத் தொடங்கியது. தொடர்ந்து ராகேஷ்குமாரிடம் நகை அடகு வைத்திருந்தவர்களின் ரசிதுகளை எடுத்துக்கொண்டு காவல்துறையினர் அந்தந்த முகவரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த ரசீதுகளில் இருப்பவை அனைத்தும் போலி முகவரிகள் என்பதோடு யாரும் நகைகளை அடகு வைக்கவில்லை என தெரியவந்தது.

தொடர்ந்து அடகுக் கடையின் உரிமையாளர் ராகேஷ்குமார் ஜெயின் மற்றும் அவரின் மகன் சொரூப்பிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் அடகுக் கடையில் நகைகள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என்பதும் கொள்ளையடிக்கப்பட்டதுபோல ஜோடிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. ராகேஷ்குமார் ஜெயின் முதலில் அந்தப் பகுதியில் அடகுக் கடை வைத்தபோது அங்கு வேறு எந்த அடகுக் கடையும் இல்லை. அதனால் அவரது தொழில் லாபகரமாக இயங்கியது. கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் அடுத்தடுத்து புதிது புதிதாக அடகுக் கடைகள் முளைத்துள்ளன. அதனால் இவரது கடைக்கு அடகு வைக்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாதத்துக்கு 2 கிராம், 3 கிராம் நகைகள் கூட அடகு வைக்க வாடிக்கையாளர்கள் வருவதில்லை. அதனால் அவருக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குடும்பச் செலவுக்காக வாங்கிய கடன் 50 லட்ச ரூபாயைத் தாண்டியிருக்கிறது.

நகை அடகுக்கடை
நகை அடகுக்கடை

அதனால், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதைப்போல நாடகத்தை அரங்கேற்றினால், இன்ஷூரன்ஸ் தொகை கிடைக்கும், அதை வைத்து கடனை அடைத்துவிட்டு செட்டில் ஆகிவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார் ராகேஷ் குமார் ஜெயின். ஆனால், காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணை அவரது கொள்ளை நாடகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு