Published:Updated:

புதுச்சேரி: `30 லட்ச ரூபாய்க்கு மேல விட்டுட்டேன், மது!' - இளைஞரின் உயிரைப் பறித்த ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார்
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி ரூ.30 லட்சம் வரை கடன் ஏற்பட்டதால் விரக்தியடைந்த புதுச்சேரி இளைஞர் ஒருவர் தீக்குளித்து, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

``என்னை மன்னிச்சிடு மது...”

’ஆன்லைன் ரம்மி’ என்ற இணையதள சூதாட்டத்தால் தங்கள் சேமிப்புகளை இழப்பதுடன், கடன்காரர்களாகித் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. புதுச்சேரி, வில்லியனூரை அடுத்திருக்கும் கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜயகுமார், வயது 38. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் இருக்கின்றனர். தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றின் சிம் கார்டுகளை விற்கும் மொத்த விற்பனையாளராக இருந்த இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்குக்காக ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

ஒருகட்டத்தில் அந்த சூதாட்டத்துக்கு அடிமையாகி, தன்னிடமிருந்த சேமிப்புப் பணம் முழுவதையும் இழந்த அவர், உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் ரூ.30 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கியிருக்கிறார். இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர், தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்னர் தனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு உருக்கமான ஆடியோ ஒன்ரை அனுப்பியிருக்கிறார். அந்த ஆடியோவில், ``என்னை மன்னிச்சிடு மது. என்னால ஒண்ணும் பண்ண முடியலை மது. தூங்காம கண்ணெல்லாம் மங்கலாத் தெரியுது. உடம்பெல்லாம் வீக் ஆகிடுச்சு மது. நான் ஒரு ரூபா ரெண்டு ரூபா விடலை மது. கணக்குப் பாத்தா 30 லட்ச ரூபாய்க்கு மேல விட்டிருக்கேன். தப்புதான். போதை மாதிரி விளையாடிக்கிட்டே இருந்துட்டேன். ஒரு நாளைக்கு ரூ.50,000 ஜெயிச்சா, மத்த மூணு நாள்ல நம்மகிட்ட இருந்து ரெண்டு லட்ச ரூபா வெளியில போயிடுது.

``ஓடி ஓடி சம்பாதிச்சேன்...’’

அது எனக்குப் புரியவே இல்லை. அது புரியாமலேயே விட்ட காசைப் புடிச்சிடலாம், இந்த டோர்னமென்ட்டுல அடிச்சிடலாம், அடுத்த டோர்னமென்ட்டுல அடிச்சிடலாம்னு பல டோர்னமென்ட் விளையாடிட்டேன் மது. கடைசிவரைக்கும் அவனுங்க நம்மள வெச்சித்தான் செஞ்சானுங்கன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி. தெரிஞ்சும் விளையாடினேன். இப்போகூட எனக்கு விளையாடணும்னு தோணுது. அந்த அளவுக்கு அதுக்கு அடிக்ட் ஆகியிருக்கேன். எப்படித்தான் நான் அடிக்ட் ஆனேன்னு தெரியலை.

கருகிய நிலையில் விஜயகுமார் உடல்
கருகிய நிலையில் விஜயகுமார் உடல்

நான் உன்னை அந்த அளவுக்கு லவ் பண்ணினேன் மது. பசங்களைப் பார்த்துக்கோ. ரெண்டு அக்கவுன்ட்லயும் கொஞ்சம் கொஞ்சம் காசு இருக்கும். இப்போகூட அந்த ஆன்லைன் ரம்மி மேல் ஆப்ல இருந்து 17,000 ரூபாய் உன் அக்கவுன்டுக்குத்தான் ரெடீம் பண்ணியிருக்கேன். அது திங்கக்கிழமை உனக்கு கிரெடிட் ஆயிடும். இடத்தை வித்துடு. நகையையெல்லாம் வித்துட்டு மதுரையில உங்க அம்மா வீட்டுக்குப் போய் செட்டில் ஆகிடு. ஏன்னா எங்க வீட்டுலல்லாம் யாரும் உன்னை அந்த அளவுக்குப் பார்த்துக்க மாட்டாங்க. என்னை மட்டும் மறந்துடாத மது (உடைந்து அழுகிறார்). ஒன்றரை வருஷத்துல வாழ்க்கை இப்படி மாறிடுச்சி. எப்படி ஓடி ஓடி சம்பாரிச்சேன் தெரியுமா... டிஸ்ட்ரிபியூஷன்ல அப்படி இருந்தேன் நான்.

``எனக்கு நீ எதாவது பண்ணணும்னு நினைச்சா...”

இன்னைக்கு அந்த நெட்வொர்க்ல கேவலமா இருக்கேன். என்னால வேலையே செய்ய முடியலை. அந்த அளவு லட்சக்கணக்குல சம்பாரிச்சேன். ஆனா, இன்னிக்கி என் மூளை வேலை செய்யலை. எல்லாமே மங்கிப் போயிடுச்சி. ஒரு காலத்துல இந்தியன் மொபைல் டிஸ்ட்ரிபியூஷன் பேரு தமிழ்நாட்டுக்கே தெரியும். அந்த அளவுக்கு என் பேரை ஃபேமஸ் பண்ணிவெச்சிருந்தேன். ஆனால் இந்த ரம்மியில நான் அடிக்ட் ஆனதால என்னால பிசினஸ் பண்ணவே முடியலை. பசங்கள ஒழுங்காகப் பார்த்துக்க முடியலை. உன்னை என்னால பார்த்துக்க முடியலை. என்னைவிட்டு எல்லாமே போயிடுச்சி. என்னால என்னை மாத்திக்க முடியலை. எனக்கு இதைவிட்டா வேற வழியே தெரியலை மது. அந்த ஐடியாவுல (சிம்கார்டு நிறுவனம்) ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல இருக்கு. அக்கவுன்ட்ல கொஞ்சம் கேஷ் இருக்கு. அது இல்லாம வீட்ல அந்த மஞ்சப் பையில கொஞ்சம் கேஷ் இருக்கு. பசங்களைப் பார்த்துக்க மது. இன்ஷூரன்ஸ், பாரதியார் பேங்க்கெல்லாம் க்ளோஸ் பண்ணிடு. ஒரு ரூபா, ரெண்டு ரூபாயா இருந்தாலும் எல்லாத்தையும் சுருட்டி ஒரே அமௌன்ட்டா ஆக்கி எடுத்துட்டு உங்க ஊருக்குப் போயி. 5 லட்ச ரூபாய் இருந்தாலும் அதை பேங்க்ல போட்டு, அதுல வர்ற வட்டியை வாங்கி பசங்களைப் பார்த்துக்க.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

பசங்களை என்னை மாதிரி வாழ விடாத மது. நீ ஏதாவது பண்ணணும் நினைச்சா, இந்த ஆன்லைன்ல நடக்குற விஷயத்தையெல்லாம் தடுக்குறதுக்கு யாருகிட்டயாவது சொல்லு. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எதுலயாவது போட்டு, `என் வாழ்க்கை அழிஞ்சி போச்சு... எம்புருஷன் செத்துட்டான்’னு போட்டு ஆன்லைன்ல நடக்குற எல்லா கேம்களையும் ஆஃப் பண்ணி விட்டுடு. அது எனக்கு மன திருப்தியை அளிக்கும். இன்னிக்கு நான் சாகுறதுக்கு முழுக் காரணமும் அதுதான். என்னைப்போல பலபேரு அதுல மாட்டிக்கிட்டு இருக்கான். விளையாடிட்டே இருக்கானுங்க. என்ன முடிவுல விளையாடறானுங்கன்னே தெரியலை. முடிஞ்ச அளவுக்கு அந்த கம்பெனியையெல்லாம் இழுத்து மூடிடு மது.

``பசங்களைப் பார்த்துக்க. ஐ லவ் யூ...”

எனக்கு தெய்வம் நீ. என் தெய்வத்தைவிட்டு நான் போறேன். பாப்பாவைப் பார்த்துக்க மது. பாப்பாவைக் கூட கூட்டிக்கிட்டு போயிலாம்னுதான் பார்த்தேன். அந்தக் காரியத்தைப் பண்ண தைரியம் இல்லை எனக்கு. அப்பா இல்லாம எம்பொண்ணு எப்படி வாழுவான்னு தெரியல. இந்த ஆவியெல்லாம் உண்மையா இருந்தா உங்க கூடவேதான் இருப்பேன். உங்களைப் பாத்துக்கிட்டேதான் இருப்பேன். நான் எங்கே செத்துக் கெடக்கறேனோ அங்கேதான் என் வண்டியும், சின்ன போன், பெரிய போன் ரெண்டுமே என் வண்டியிலதான் இருக்கு. சின்ன போனை பிரபு சார்கிட்டக் குடு. அவர் ஈ.சி பண்ணி அதை அமௌன்ட்டா ஆக்கிடுவாரு. என்னை விட்ருங்க சந்தோஷம். எல்லாரும் என்னை முட்டாள், பைத்தியக்காரன்னு என்ன வேணும்னாலும் சொல்லட்டும் மது. ஆனால் என்னால முடியலை.

பணம் வைத்து சீட்டாடுவது குற்றம்;  ஆன்லைன் ரம்மி குற்றமில்லை - ஆன்லைன் சூதாட்டப் பின்னணி !

என் மைண்ட் என்னைவிட்டுப் போயிடுச்சு. எனக்காக ஒரே விஷயம் பண்ணு. இந்த ஆன்லைன் கேம் எல்லாத்தையும் தடுக்குற மாதிரி முடிஞ்ச அளவுக்கு எல்லா குருப்லயும் ஷேர் பண்ணி விடு. என்னாலயாவது அது நின்னதா இருக்கட்டுமே... நானே கடைசியா இருக்கட்டும். எனக்கு, அதுவாவது சந்தோஷமா இருக்கும். நான் எவ்ளோ அமௌன்ட் விட்டேன்னு நீ தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா என் ஆந்திரா பேங்க் அக்கவுன்ட்டையும், உன் இந்தியன் பேங்க் அக்கவுன்ட்டையும் எடுத்து நீ செக் பண்ணா உனக்குப் புரியும். வெளிய சொல்ல முடியாத அளவுக்கு அமௌன்ட் அது. அதையெல்லாம் என்னால சம்பாரிக்கவே முடியாது. ஆனா சம்பாரிச்சி விட்டுட்டேன். பச்சையப்பன்கிட்ட பத்திரம் மாட்டிக்கிட்டு இருக்கு. அதை மூட்டு வித்து, கடனை அடைச்சிடு. நீ உன் அம்மாகூட பேச ஆரம்பிச்சிட்டா மாறிடவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ வாழு. பசங்களைப் பாத்துக்க. ஐ லவ் யூ மது. நன்றி” என்பதுடன் முடிவடைகிறது.

அடுத்த கட்டுரைக்கு