Published:Updated:

`தொழிலை எனக்கு விட்டுக்கொடு; பிரான்ஸிலிருந்து திரும்பிய மகன்!’ - கொலையில் முடிந்த சண்டை

ரஞ்சித்
ரஞ்சித்

குடும்பப் பிரச்னையில் மகனை தந்தையே அடித்துக் கொலைசெய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் மீனவர், குமார் (69). மீன் மற்றும் இறால்களை மொத்த விலைக்கு விற்கும் வியாபாரியான இவர், ஃபைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சித், ரீகன் என இரண்டு மகன்கள். மூத்த மகன் ரஞ்சித், பொறியியல் படிப்பு முடித்துவிட்டு லண்டனில் வேலை செய்துவந்தார். அங்கு போதுமான சம்பளம் வழங்கப்படாததால், அங்கிருந்து திரும்பிவிட்டார். இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு, அவருக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. அதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் வசித்துவருகிறார். இளைய மகன் ரீகனுக்கு தொழிலில் ஒரு பகுதியை பிரித்துக் கொடுத்திருக்கிறார், குமார்.

ரஞ்சித்
ரஞ்சித்

அதேசமயம், பிரான்ஸ் நாட்டில் இருந்த ரஞ்சித்துக்கு அங்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் தனியாக புதுச்சேரி வந்த ரஞ்சித், தம்பிக்கு கொடுத்ததுபோல தனக்கும் தொழிலை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தினமும் மது குடித்துவிட்டு வந்து தந்தையிடம் தகராறு செய்திருக்கிறார்.

`தாய் கொலை... அந்தமானில் நண்பருடன் சுற்றுலா!’- பெங்களூரு பெண்ணை வளைத்த போலீஸ்

அதேபோல, நேற்று முன்தினம் இரவும் மது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்ற ரஞ்சித், தன் தாய் அன்னக்கொடியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், மது போதையில் அன்னக்கொடியைத் தாக்கியிருக்கிறார் ரஞ்சித். அப்போது, அங்கிருந்த ரஞ்சித்தின் தம்பி ரீகன், அவரின் கை மற்றும் கால்களைப் புடவையால் கட்டிப் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பிறகும் ரஞ்சித் அனைவரையும் திட்டித் தகராறு செய்திருக்கிறார். அதில் கோபமடைந்த குமார், ஐஸ் கட்டிகளை உடைக்கும் இரும்புக் கம்பியால் ரஞ்சித்தின் தலையில் அடித்திருக்கிறார். அதில் பலத்த காயம் ஏற்பட்டதால், கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலேயே துடிதுடித்து உயிரிழந்தார் ரஞ்சித்.

கொலை
கொலை

அதனால் நள்ளிரவில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அந்த வயதான தம்பதியினர், அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, அங்கு சென்று ரஞ்சித்தின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், குமாரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ரஞ்சித்தின் தாய் அன்னக்கொடி, இளைய மகன் ரீகன் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின் செல்ல