Published:Updated:

உடல் மக்க யூரியா; பரோலில் வந்து மனைவியைக் கொலைசெய்த ரௌடி! - 9 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியது எப்படி?

கொலை - ரௌடி

9 ஆண்டுகளுக்கு முன்பு கொலைசெய்து புதைத்த தன் மனைவியின் எலும்புகளை மறைப்பதற்காகத் தோண்டிய பிரபல ரௌடியை, அதிரடியாகல் கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி போலீஸ்.

உடல் மக்க யூரியா; பரோலில் வந்து மனைவியைக் கொலைசெய்த ரௌடி! - 9 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியது எப்படி?

9 ஆண்டுகளுக்கு முன்பு கொலைசெய்து புதைத்த தன் மனைவியின் எலும்புகளை மறைப்பதற்காகத் தோண்டிய பிரபல ரௌடியை, அதிரடியாகல் கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி போலீஸ்.

Published:Updated:
கொலை - ரௌடி

புதுச்சேரி முதலியார்பேட்டையில் அமைந்திருக்கும் உழந்தை ஏரிக்கரையில், சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் யாரோ சிலர் ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் சடலத்தைத் தோண்டி எடுத்ததாகச் சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் சென்றது. அந்தத் தகவலின் அடிப்படையில் களமிறங்கிய அதிரடிப்படை போலீஸார், சடலத்தைத் தோண்டிய அனிதா நகரைச் சேர்ந்த வேல்முருகன், சரவணன், சக்தி நகரைச் சேர்ந்த மனோகர் உள்ளிட்ட மூவரையும் அலேக்காகத் தூக்கி விசாரணை செய்தனர். இவர்கள் மூவரும் முதலியார்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரௌடி பாஸ்கரின் நண்பர்கள்.

ரௌடி பாஸ்கர்
ரௌடி பாஸ்கர்

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்கர், மனைவியைக் கொலைசெய்ததாகவும், அந்த எலும்பைத்தான் தற்போது தோண்டி எடுத்ததாகவும் ஒப்புக்கொண்டனர். அதனடிப்படையில் பாஸ்கரையும் இரவோடு இரவாகத் தூக்கியிருக்கிறது போலீஸ். புதுச்சேரி முதலியார்பேட்டையில் வசிக்கும் ரௌடி பாஸ்கர், பிரபல தாதாவும், ஆயுள் தண்டனை கைதியுமான கர்ணாவின் சகோதரர். பெரியார் நகரைச் சேர்ந்த செல்வம் என்பவரைக் கொலைசெய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்குச் சென்ற இவர், நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு விடுதலையானார்.

இவரின் மனைவி எழிலரசி கடந்த 2013-ம் ஆண்டு திடீரென மாயமானார். இந்த நிலையில்தான், தற்போது அவர் கொலைசெய்யப்பட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளிடம் பேசினோம். “பாஸ்கருக்கும் எழிலரசிக்கும் 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு பெரியார் நகரைச் சேர்ந்த செல்வத்தைக் கொலைசெய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, தன் அண்ணன் கர்ணாவுடன் சிறைக்குச் சென்றான் பாஸ்கர். சிறைக்குள் இருந்தபடியே தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பது போன்றவற்றைச் செய்துவந்த பாஸ்கர், அதற்காக வெளியில் இருந்த தன்னுடைய நண்பன் செந்திலைப் பயன்படுத்திக்கொண்டான்.

ஏரியில் எழிலரசியின் எலும்பைத் தேடும் ஸ்கூபா டைவர்கள்
ஏரியில் எழிலரசியின் எலும்பைத் தேடும் ஸ்கூபா டைவர்கள்

அந்தப் பணத்தைக் கொடுக்கப் போகும்போது பாஸ்கரின் மனைவி எழிலரசிக்கும், செந்திலுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தகவல் சிறைக்குள் இருந்த பாஸ்கருக்கு தெரியவந்திருக்கிறது. அதில் கோபமடைந்த பாஸ்கர், தன் மனைவியைக் கொலைசெய்துவிட முடிவுசெய்தான். அதன்படி 2013-ம் ஆண்டு, ஒரு மாதம் பரோலில் வந்த பாஸ்கர், கிருமாம்பாக்கத்தில் சகோதரி வீட்டில் தங்கியிருந்த எழிலரசியைப் பார்க்கச் சென்றான். அப்போது பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு, எழிலரசியை மட்டும் வீட்டுக்குப் போகலாம் என்று காரில் அழைத்துச் சென்றிருக்கிறான். போகும் வழியில் காரிலேயே எழிலரசியின் புடவையைக்கொண்டு அவர் கழுத்தை இறுக்கி கொலைசெய்திருக்கிறான்.

அதையடுத்து ஏற்கெனவே தன் நண்பர்கள் வேல்முருகன், சரவணன், மனோகர் மூலம் உழந்தை ஏரிக்கரையில் தோண்டியிருந்த குழியில் எழிலரசியைப் புதைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டான். உடல் உடனே மக்கிவிட வேண்டும் என்பதற்காக சடலத்தின்மீது யூரியாவையும் கொட்டியிருக்கிறான். மறுநாள் எழிலரசியின் தங்கை வள்ளி `அக்கா எங்கே?’ என்று பாஸ்கரிடம் கேட்டிருக்கிறார். அப்போது `அவளைப் பற்றிக் கேட்டால், உன்னையும், உன் குடும்பத்தையும் புதைத்துவிடுவேன்' என்று மிரட்டியிருக்கிறான். கொலை வழக்கில் சிறைக்குச் சென்றவன் என்பதாலும், ரௌடியின் தம்பி என்பதாலும் பாஸ்கருக்கு பயந்து எழிலரசியின் உறவினர்கள் அமைதியாகிவிட்டார்கள்.

கைதுசெய்யப்பட்ட பாஸ்கரின் நண்பர்கள்
கைதுசெய்யப்பட்ட பாஸ்கரின் நண்பர்கள்

அத்துடன் எழிலரசி யாருடனோ ஊரைவிட்டு ஓடிவிட்டார் என்றும் தகவலைப் பரப்பினான் பாஸ்கர். அதேசமயம் மனைவி எழிலரசியை பாஸ்கர் கொடைக்கானல் மலையிலிருந்து தள்ளிவிட்டு கொலைசெய்துவிட்டதாகவும் பேசிக்கொண்டனர் மக்கள். ஆனாலும் பாஸ்கர் மற்றும் அவர் நண்பர்களின் நடவடிக்கைகளை நாங்கள் ரகசியமாகக் கண்காணித்துவந்தோம். அப்போதுதான் சில நாள்களுக்கு முன்பு, உழந்தை ஏரிக்கரையில் இரவு ஜே.சி.பி இயந்திரம் மூலம் பாஸ்கர், அவர் நண்பர்களான வேல்முருகன், சரவணன், மனோகர் மூலம் எதையோ தோண்டி எடுத்தாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அது எழிலரசியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாஸ்கர் தவிர்த்த மூவரிடமும் விசாரணை செய்தோம்.

அவர்களும் அது எழிலரசிதான் என்று ஒப்புக்கொண்டனர். தற்போது அந்த ஏரியைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அப்போது எழிலரசியின் எலும்புக்கூடு கிடைத்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த இவர்கள், இரவோடு இரவாக எழிலரசியின் உடலைத் தோண்டி அப்புறப்படுத்த நினைத்திருக்கிறார்கள். ஆனால் யூரியா கொட்டி புதைத்ததால் உடல் முழுதாக மக்கிவிட்ட நிலையில், எழிலரசியின் எலும்புக்கூடுகளும், அவர் கட்டியிருந்த புடவையும் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

யூரியா புண்ணியத்தால் வேலை எளிதாகிவிட்டது என்று நினைத்த அவர்கள், புடவையைக் கொளுத்திவிட்டு, எலும்புகளை உடைத்து ஏரிக்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் எங்கள் ஸ்கெட்ச்சில் மாட்டிக்கொண்டார்கள். இந்த ஒன்பது ஆண்டுகளாக இவர்கள் ஆட்டோ ஓட்டுநராகவும், காய்கறிக் கடை வைத்துக்கொண்டும், கட்டப்பஞ்சாயத்து செய்துகொண்டும் நடமாடி வந்திருக்கிறார்கள். தற்போது நான்கு பேரையும் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உழந்தை ஏரியில் ஸ்கூபா டைவர்களின் உதவியுடன், எழிலரசியின் எலும்புகளைத் தேட ஆரம்பித்திருக்கிறது போலீஸ். நேற்று சில எலும்பு பாகங்கள் கிடைத்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் தேடுதல் பணி நடைபெற்றுவருகிறது.