Published:Updated:

`உங்கள் மீது 144 தடை இருக்கிறது!' - கைது செய்யச் சென்ற போலீஸாருக்கு ரவுடிகளால் நேர்ந்த சோகம்

Police Attacked by Rowdies
Police Attacked by Rowdies

புதுச்சேரியில் ரவுடிகள் குறித்து விசாரிக்கச் சென்ற 2 காவலர்களை நடுரோட்டில் வைத்து அந்த ரவுடிகள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் சமீபகாலமாகக் குற்றங்களின் பிறப்பிடமாகவும் குற்றவாளிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரும் அவர்களுடன் கைகோத்துக் கொள்வதால் பயமில்லாமல் சுதந்திரமாக வலம் வருவதுடன், கொலை, கொள்ளை, போனில் மிரட்டிப் பணம் வசூலிப்பது, கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்களைச் சுதந்திரமாகச் செய்து வருகிறார்கள்.

Police Attacked  by Rowdies
Police Attacked by Rowdies

புதுச்சேரியையொட்டியிருக்கும் கடலூர், விழுப்புரம் போன்ற தமிழக காவல்துறையினரிடம் ரவுடிகளுக்கு இருக்கும் பயத்தில் 1 சதவிகிதம்கூட புதுச்சேரி காவல்துறையினரிடம் இருப்பதில்லை என்பதே யதார்த்தம். தற்போது புதுச்சேரிக்கு டி.ஜி.பி-யாக வந்திருக்கும் பாலாஜி ஸ்ரீவத்சவா மாநிலம் முழுவதிலும் ரவுடிப் பட்டியலில் இருப்பவர்களின் விவரங்கள், அவர்களின் செயல்பாடுகள் போன்றவற்றைக் கவனிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

அதன்படி அனைத்துக் காவல் நிலையங்களிலும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் பகுதிகளில் இருக்கும் ரவுடிகள் குறித்த விவரங்களையும், அவர்கள் வீட்டில்தான் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரித்து அறிக்கை அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

Rowdy Joseph
Rowdy Joseph

அதேபோல, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி மதுக் கடத்தலைத் தடுக்கும் வகையில் புதுச்சேரி, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் போலீஸாரின் ரோந்துப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன்படி, கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிவகுரு மற்றும் மைக்கேல் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரிக்கலாம்பாக்கம் மக்கள் கூடும் பிரதான சந்திப்பில் கையில் கத்தியுடன் சிலர் நின்றுகொண்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்று வந்த தகவலையடுத்து அங்கு விரைந்து சென்றனர்.

Rowdy Aiyanar
Rowdy Aiyanar

அப்போது, சிதம்பரம் பெட்ரோல் பங்க் ஊழியர்களைக் கத்தியால் தாக்கிப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ரவுடி ஜோசப், அவரது நண்பர் ரவுடி அய்யனார் மற்றும் அவரது தம்பி அருணாசலம் ஆகியோர்தான் தகராறு செய்கிறார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீது 144 தடை உத்தரவு இருப்பதால் ஊருக்குள் வரக்கூடாது என்று எச்சரித்த காவலர்கள் அவர்களைக் கைது செய்து முயற்சி செய்தனர்.

`கண்ணைக் கட்டி போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர்!' - கோவில்பட்டி ரவுடி கதறல்

அப்போது காவல்துறையினரின் இருசக்கர வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர் அய்யனார் உள்ளிட்ட 3 ரவுடிகள். இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றவே அந்த ரவுடிகள் காவலர்கள் சிவகுரு மற்றும் மைக்கேலை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

Rowdy Arunachalam
Rowdy Arunachalam

நடுரோட்டில் காவல்துறையினரை ரவுடிகள் புரட்டி எடுத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 2 போலீஸாரையும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையினரைத் தாக்கிய ரவுடிகள் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர்கள் மீது காவலர் சிவகுரு அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சியில் ஈடுபடுதல் (307), காவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் (353) உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை மற்றும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Police Attacked  by Rowdies
Police Attacked by Rowdies
Police Attacked  by Rowdies
Police Attacked by Rowdies

இதனிடையே, காவலர்களைத் தாக்கிய ரவுடிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி கரிக்கலாம்பாக்கம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் பகுதியில் ரவுடிகளின் அராஜகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் நிம்மதியாக இந்த வழியாகச் சென்று வர முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காவலர்களைத் தாக்கிய ரவுடிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" எனக் கொதித்தனர் பொதுமக்கள். அவர்களிடம் காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு