Published:Updated:

புதுச்சேரி: பள்ளிச் சிறுமியின் ஆபாச வீடியோ; அலறிய பெற்றோர்! -ஃபேஸ்புக் நட்பால் விபரீதம்

பெண்களை ஏமாற்றிய இளைஞர்; ஃபேஸ்புக்கால் நடந்த விபரீதம்!
பெண்களை ஏமாற்றிய இளைஞர்; ஃபேஸ்புக்கால் நடந்த விபரீதம்!

கமலக்கண்ணன் வைத்திருந்த இரண்டு செல்போன்களையும் ஆய்வுசெய்த காவல்துறையினர், அதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் 500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமடைந்து இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. அதனால் பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவிட்ட மத்திய அரசு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை எடுக்க கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. அதனால் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு செல்போன் சென்றது. அதற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்த நிலையில், ஆன்லைன் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது. அதனால் வேறு வழியின்றி அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்தனர்.

சிறுமி
சிறுமி

புதுச்சேரியைச் சேர்ந்த அந்தத் தம்பதியர், கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தங்களுடைய 14 வயது மகளுக்கு ஆண்ட்ராய்டு போனை வாங்கிக் கொடுத்தனர். அதன் பிறகு படிப்பில் சுட்டியான அந்தச் சிறுமி, எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கியிருந்திருக்கிறார். தங்கள் மகள் இரவு பகலாக செல்போனும் கையுமாக இருந்ததால், நன்றாகப் படிக்கிறாள் என்று நினைத்து சந்தோஷப்பட்டிருக்கின்றனர் அந்தப் பெற்றோர். ஒருநாள் நள்ளிரவில் கழிவறை செல்வதற்காக கண்விழித்திருக்கிறார் அந்தச் சிறுமியின் தாய். அப்போது பக்கத்து அறையில் செல்போன் முன்பு தனது மகள் ஆபாசமாக நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், சிறுமியிடம் அது குறித்து விசாரித்திருக்கிறார்.

முதலில் எதையும் பேச மறுத்த அந்தச் சிறுமி, ஒருகட்டத்தில் பேச ஆரம்பித்ததும், அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கின்றனர் அந்தப் பெற்றோர். ஆன்லைன் வகுப்புக்காக ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தத் தொடங்கிய அந்தச் சிறுமி, அதில் ஃபேஸ்புக் இன்ஸ்டால் செய்து சேலம் பகுதியில் ‘டிக்டாக்’ வட்டாரத்தில் பிரபலமாக இருக்கும் ஓர் இளைஞருக்கு நட்பு அழைப்பும் விடுத்திருக்கிறார். அவரும் ஏற்றுக்கொள்ள இருவரும் சாதாரணமாக ’சாட்’ செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். நாளடைவில் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறிய அந்த இளைஞர், அவருடன் பாலியல்ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறார். சிறுமிக்கும் அப்படியான பேச்சுகள் பிடித்துவிடவே அவரும் தொடர்ந்திருக்கிறார். ஒருகட்டத்தில் `உன்னை ஆபாசமாகப் பார்க்க வேண்டும்’ என்று கூறிய அந்த இளைஞர், சிறுமியின் போட்டோவையும், வீடியோக்களையும் கேட்டிருக்கிறார்.

சிறார் வதை
சிறார் வதை

அந்தச் சிறுமியும் அந்த இளைஞரை நம்பி, அப்பாவித்தனமாக தனது நிர்வாண போட்டோவையும், வீடியோவையும் அனுப்ப, பதிலுக்கு அந்த இளைஞரும் தனது அந்தரங்க வீடியோவை அனுப்பியிருக்கிறார். கடந்த ஒரு வருடமாக இது தொடர்ந்த நிலையில், ஒரே நாளில் பலமுறை ஆபாசமாக வீடியோ கால் பேசும்படி சிறுமியை வற்புறுத்தியிருக்கிறார் அந்த இளைஞர். சிறுமியால் அது முடியாமல் போகவே, `உனது வீடியோக்களை இன்டர்நெட்டில் விட்டுவிடுவேன்’ என்று மிரட்டத் தொடங்கியிருக்கிறார் இளைஞர். அதனால் வேறு வழியின்றி சிறுமியும் பெற்றோருக்குத் தெரியாமல் `லைவ் சாட்’ , `வீடியோ கால்’ எனத் தொடர்ந்திருக்கிறார். இவை அனைத்தையும் கேட்ட பெற்றோருக்குத் தலை சுற்றியிருக்கிறது. ஆனாலும் தனது மகளுக்கு நேர்ந்தது மற்ற பெண்களிடமும் தொடரக் கூடாது என்று நினைத்த அந்தப் பெற்றோர், குழந்தைகள்நல பாதுகாப்புக் குழுவிடம் இது குறித்துப் புகாரளித்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட குழந்தைகள்நல பாதுகாப்புக்குழு, அதன்மீது வழக்கு பதிவு செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல்துறையினர், சிறுமியை மிரட்டிய ஃபேஸ்புக் முகவரியில் இருந்த இளைஞரை அலேக்காகத் தூக்கியது. ஆனால் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவருக்கும் சிறுமிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. அத்துடன் அவருடைய புகைப்படத்தையும் பெயரையும் பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் போலிக் கணக்கை தொடங்கிய யாரோ ஒருவர்தான் சிறுமியிடம் சில்மிஷம் செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தனர் காவல்துறையினர். அதையடுத்து சைபர் க்ரைம் மூலம் அந்த போலி கணக்கு தொடங்கப்பட்ட செல்போன் எண்ணைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அந்த எண்ணைப் பயன்படுத்திவந்த ஈரோட்டைச் சேர்ந்த ஓர் இளைஞரை வளைத்தது.

சென்னை: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மனைவியின் நிர்வாண வீடியோ - மூன்று திருமணம் செய்த இன்ஜினீயர் கைது!

அதன் பிறகு அந்த இளைஞர் 32 வயதான கமலக்கண்ணன் என்பதும், தஞ்சாவூரைச் சேர்ந்த அவர் எம்.ஏ., எம்.பில்., பி.எட் முடித்துவிட்டு தற்போது திருப்பூரில் சாயப் பட்டறை ஒன்றில் மேலாளராகப் பணியாற்றிவருவதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போலி ஃபேஸ்புக் முகவரி மூலம் இப்படிப் பல பெண்களை ஏமாற்றி, அவர்களுடன் பாலியல்ரீதியில் சாட் செய்து, அவர்களின் ஆபாச வீடியோக்களை வாங்கிவைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. கமலக்கண்ணன் வைத்திருந்த இரண்டு செல்போன்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் 500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களைப் பார்த்து காவல்துறையினரே வாயடைத்துப் போயிருக்கின்றனர். அதையடுத்து கமலக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். தற்போது சிறையிலிருக்கும் கமலக்கண்ணனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு