Published:Updated:

`குடியிருப்புப் பகுதியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு!' -புதுச்சேரி தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்

புதுச்சேரியில் குப்பைத்தொட்டியில் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டு வெடிகுண்டு
நாட்டு வெடிகுண்டு ( Representational Image )

புதுச்சேரியைச் சேர்ந்தவர் செல்வம் (40). தெருவோரங்களில் கிடக்கும் குப்பைகளைச் சேகரித்து, அவற்றைப் பழைய இரும்புக் கடைகளில் விற்று வாழ்கையை நடத்திவருபவர். நேற்று முத்தியால்பேட்டை பகுதியில் கிடந்த குப்பைகளை சாக்கு மூட்டையில் சேகரித்தார்.

தொழிலாளி செல்வம்
தொழிலாளி செல்வம்

அதையடுத்து, காராமணிக்குப்பம் சாலை சந்திப்பில் பழைய இரும்புக்கடைக்கு எதிரே உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளைப் பொறுக்கியதோடு, அங்கேயே அமர்ந்து பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், அட்டைப்பெட்டிகள் என அனைத்தையும் தரம் பிரித்துக்கொண்டிருந்தார். அப்போது, மூடப்பட்டிருந்த ஒரு அட்டைப்பெட்டியைத் திறந்தார்.

அதனுள் துணியால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு இருந்தது. ஆனால், அவருக்கு அது என்னவென்று தெரியாததால், அதைப் பிரித்துப்பார்க்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது, பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதில், அவரின் இடது கையின் ஒரு விரல் துண்டான நிலையில், மற்ற விரல்கள் சிதைந்தன. அதிர்ச்சியடைந்த அவர், சிதைந்த கையோடும் சொட்டிய ரத்தத்துடனும் பழைய இரும்புக் கடையை நோக்கி ஓட முயல, சிறிது தூரத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்.

அந்த நாட்டு வெடிகுண்டில் இருந்து சிதறிய இரும்புத் துகள்கள் மற்றும் சிறிய ஆணிகள், அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த அன்னபூரணி என்ற 64 வயது முதாட்டியின் தோள்களைப் பதம் பார்த்தன.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை
சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை

பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால், அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நான்குபுறமும் சிதறி ஓடியுள்ளனர். வெடித்துச் சிதறிய நாட்டு வெடிகுண்டின் சத்தம் 1 கி.மீ தூரம் வரை கேட்டிருக்கிறது.

அதையடுத்து, அங்கு விரைந்த காவல்துறையினர், கை விரல்கள் சிதைந்து ரத்தக் காயங்களுடன் மயங்கிக்கிடந்த தொழிலாளி செல்வம் மற்றும் மூதாட்டி அன்னபூரணியை மீட்டு, புதுவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அடுத்து, சம்பவ இடத்துக்கு அழைத்துவரப்பட்ட காவல்துறையின் மோப்ப நாய் வீரா மற்றும் கைரேகை நிபுணர்கள், அந்த குப்பைத் தொட்டியில் வேறு வெடிகுண்டுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்தனர்.

அங்கு சிதறிக்கிடந்த வெடிகுண்டுத் துகள்களையும் சேகரித்தனர். சமீபகாலமாக புதுச்சேரியில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்திருக்கும் நிலையில், தற்போது குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.