Published:Updated:

எம்புள்ள வெந்து கெடக்கான்யா... வேலை தேடிச் சென்ற இளைஞர் எரிக்கப்பட்ட கொடூரம்...

சதீஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
சதீஷ்குமார்

சம்பவத்தப்ப அந்த குரூப் போதையில இருந்திருக்கு. குடிவெறியிலதான் கண்ணுமண்ணு தெரியாம இப்படியொரு கொடூரத்தைச் செஞ்சிருக்கானுங்க’

எம்புள்ள வெந்து கெடக்கான்யா... வேலை தேடிச் சென்ற இளைஞர் எரிக்கப்பட்ட கொடூரம்...

சம்பவத்தப்ப அந்த குரூப் போதையில இருந்திருக்கு. குடிவெறியிலதான் கண்ணுமண்ணு தெரியாம இப்படியொரு கொடூரத்தைச் செஞ்சிருக்கானுங்க’

Published:Updated:
சதீஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
சதீஷ்குமார்

‘‘உடம்பெல்லாம் எரியுதும்மா... டாக்டர்கிட்ட சொல்லி ஏதாச்சும் பண்ணும்மான்னு அவன் கதறுறப்பல்லாம் பெத்த வயிறு பத்தி எரியுது. உடம்புல ரெண்டு பக்கமும் வெந்துடுச்சு... பொழைக்கறதுக்கு வாய்ப்பில்லைன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க’’ - உடல் முழுவதும் கட்டுகளுடன் படுத்திருக்கும் தன் மகனைப் பார்த்து நெஞ்சில் அறைந்துகொண்டு கதறுகிறார் அந்தத் தாய்!

ராஜ மௌரியா
ராஜ மௌரியா

ஜூலை 25-ம் தேதி நள்ளிரவு... புதுச்சேரி, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்குள் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் வலியால் அலறியபடியே நுழைந்த அந்த இளைஞரைப் பார்த்து, பணியிலிருந்த காவலர்கள் பதறிப் போனார்கள். ‘‘பெட்ரோல் பங்க்ல வேலை கேட்டுப் போன என்னை, பெட்ரோல் ஊத்தி எரிச்சுட்டாங்க’’ என்ற அந்த இளைஞர், தன்னை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றும்படி கதறியிருக்கிறார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள் காவலர்கள்.

இளைஞர் அளித்த தகவலின் அடிப்படையில் இ.பி.கோ 307-ன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், பெட்ரோல் பங்க் உரிமையாளரும், புதுச்சேரி பா.ஜ.க-வின் வணிகப் பிரிவு அமைப்பாளருமான ராஜ மௌரியா, அவரின் சகோதரர் ராஜவரதன், பங்க் ஊழியர்கள் சிவசங்கரன், குமார் உள்ளிட்ட நான்கு பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள். அத்துடன், ராஜமௌரியாவின் நண்பர்கள் மூன்று பேரைத் தேடிவருகிறார்கள்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் நம்மிடம், ‘‘அந்த இளைஞரின் பெயர் சதீஷ்குமார். அன்றைய தினம் பெட்ரோல் பங்க்குக்குச் சென்ற அவரை, அங்கு பணியிலிருந்த இரண்டு ஊழியர்கள், திருடன் என்று சந்தேகப்பட்டு விசாரித்திருக்கிறார்கள். அதற்கு அவர் வேலை தேடிவந்ததாகத் தெரிவித்திருக்கிறார். அதை நம்பாத ஊழியர்கள், பங்க் உரிமையாளரான ராஜ மௌரியாவுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். தன் சகோதரர் மற்றும் சில நண்பர்களுடன் ராஜ மௌரியா அங்கு வந்த பிறகே இந்தக் கொடூரச் சம்பவம் நடந்திருக்கிறது’’ என்றார்கள். சில காவலர்களோ, ‘‘சம்பவத்தப்ப அந்த குரூப் போதையில இருந்திருக்கு. குடிவெறியிலதான் கண்ணுமண்ணு தெரியாம இப்படியொரு கொடூரத்தைச் செஞ்சிருக்கானுங்க’’ என்றார்கள்.

எம்புள்ள வெந்து கெடக்கான்யா... வேலை தேடிச் சென்ற இளைஞர் எரிக்கப்பட்ட கொடூரம்...

சதீஷ்குமாரைச் சந்திப்பதற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றோம். உடல் முழுவதும் கட்டுகள் போடப்பட்டு வலியால் முனகிக் கொண்டிருந்தவரிடம், “ஒரு வாய் சாப்புடு கண்ணு... ஒண்ணுமில்லை, சரியாப் போயிடும், வீட்டுக்குப் போயிடலாம்” என்றபடி இட்லியைப் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தார் அவரின் தாய் பொன்னம்மா. நம்மைப் பார்த்தவுடன் அவராகவே பேசினார் சதீஷ்குமார். “வேலை கேட்டேங்க, கட்டையால அடிச்சாங்க... மிரட்டி சட்டையைக் கழட்டச் சொல்லி பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க. எரிஞ்சுக்கிட்டே அங்கிருந்து நான் ஓடியாந்தேன்… உடம்பெல்லாம் எரியுது சார்’’ என்று தட்டுத் தடுமாறிப் பேசியவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பேசினார் பொன்னம்மா. ‘‘எங்க ஊரு திருச்சிக்குப் பக்கத்துல பிராட்டியூர். இவன் என் மூத்த மகன். வேலை தேடப்போறேன்னு சொல்லிட்டு என்கிட்ட இருநூறு ரூபா வாங்கிட்டுப் போனான். அந்த பெட்ரோல் பங்க்குக்குப் போய் வேலை கேட்டிருக்கான். அப்போ என் மகனை மிரட்டினவங்க, என்ன சாதின்னு கேட்டாங்களாம். அதுக்கு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன்னு சொன்ன என் பையன், ‘ஏன் எங்களுக்கு வேலை தர மாட்டீங்களா?’னு கேட்டிருக்கான். உடனே அங்கிருந்தவங்க அவனைக் கட்டையால அடிச்சுருக்காங்க. ‘வேலை கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை. என்னை விட்டுருங்க’னு அழுதுருக்கான். அப்போ அவங்கள்ல ஒருத்தன், ‘நான் ஏற்கெனவே மூணு கொலை செஞ்சவன் தெரியுமா?’னு மிரட்டியிருக்கான். அதுக்கப்புறம்தான் அவன் மேல பெட்ரோலை ஊத்திக் கொளுத்தியிருக்கானுங்க. உடம்பு எரிய எரிய... ‘காப்பாத்துங்க’ன்னு கத்திக்கிட்டே அங்கருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடியிருக்கான்” என்று சொல்லிவிட்டு சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டவர், ‘‘எங்களுக்கு போன் வரவும் பதறியடிச்சுக்கிட்டு வந்து பார்த்தா, புள்ள உடம்பு முழுக்க வெந்துபோய் கெடக்கான்... வலி தாங்காம அவன் கதறி அழறப்பல்லாம் பெத்த வயிறு பத்தி எரியுது. உடம்புல ரெண்டு பக்கமும் வெந்துடுச்சு. அதனால, பொழைக்கறதுக்கு வாய்ப்பில்லைனு டாக்டருங்க சொல்லிட்டாங்க...’’ என்று வாயைப் பொத்திக்கொண்டு அழத் தொடங்கினார்.

எம்புள்ள வெந்து கெடக்கான்யா... வேலை தேடிச் சென்ற இளைஞர் எரிக்கப்பட்ட கொடூரம்...

“வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கைப் பதிவு செய்ய வேண்டும்” என்று சொல்லும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம், ‘‘சம்பவம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை பங்க் நிர்வாகத்தினர் அழித்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. சம்பவ இடத்தில் ஆவணங்கள் அழிக்கப்பட்டால், அந்த நிறுவனத்தை சீல் வைக்க வேண்டும். ஆனால், தற்போதுவரை அந்த பெட்ரோல் பங்க்கை மூடுவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பெட்ரோல் ஊற்றி எரிப்பதெல்லாம் வட மாநிலங்களில்தான் நடக்கும். தற்போது புதுச்சேரியும் அப்படி மாறிவிட்டது’’ என்றார். ‘இந்த வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்’ என்று மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாறனும் கோரிக்கைவைத்திருக்கிறார்.

ராஜ மௌரியாவைக் கட்சியிலிருந்து பா.ஜ.க நீக்கியிருக்கும் நிலையில், இந்த வழக்கை வன்கொடுமை வழக்காகப் பதிவுசெய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் சதீஷ்குமாரின் தம்பி ராஜ்குமார்.

பற்றியெரிகிறது மனம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism