Published:Updated:

``மாமா, என்னை ஏமாத்திட்டு போயிட்டீங்களே!”- அழகுக்கலை நிபுணரின் உடலுக்கு உரிமை கோரிய காதலி, 2 மனைவிகள்

ஜெ.முருகன்
தனம் ஏ கே

புதுச்சேரியில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட அழகுக் கலை நிபுணரின் உடலுக்கு 3 பெண்கள் உரிமை கோரிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுடன் மனைவி
குழந்தைகளுடன் மனைவி

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் ஜவஹர் நகர் குடியிருப்பில் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக வந்த தகவலையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த உடலைக் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்டவர் ஒரு மாதத்துக்கு முன்புதான் அங்கு குடி வந்தவர் என்பதால், அவரைப் பற்றி யாருக்கும் எந்தத் தகவலும் தெரிந்திருக்கவில்லை. அவரிடம் இருந்த செல்போனும் லாக் செய்யப்பட்டிருந்ததால் குழப்பத்தில் இருந்தனர் காவல்துறையினர்.

அப்போது அந்த செல்போனுக்கு வந்த அழைப்பை எடுத்தபோது எதிர்முனையில் காவியா என்ற பெண் பேசினார். அவரிடம் தகவலைக் கூறியதும்,``அவர் பெயர் சிங்காரவேலு. நேற்று இரவு என்னிடம்தான் பேசிக் கொண்டிருந்தார். திங்கள் கிழமை என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி என்னை அழைத்திருந்தார். அதற்குள் இப்படி செய்துகொண்டாரே” என்று அழுது புலம்பிய அவர், உடனே புதுச்சேரிக்கு கிளம்பி வந்திருக்கிறார்.

சிங்காரவேலு
சிங்காரவேலு

அதேபோல அந்த செல்போனுக்கு அடுத்தடுத்து போன் செய்தவர்களுக்கு சிங்காரவேலு தற்கொலை செய்துகொண்ட தகவலைத் தெரிவித்திருக்கின்றனர். அடுத்த சில மணி நேரங்களில் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு 2 குழந்தைகளுடன் வந்த தனலட்சுமி என்ற பெண் இறந்து போன சிங்காரவேலு தன் கணவர் என்று அழுது புலம்பினார். அவரை சமாதானம் செய்த காவல்துறையினர் அவரிடம் உடலை ஒப்படைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொண்டனர். அதற்குள் ``மாமா... என்னை இப்படி ஏமாத்திட்டு போயிட்டீங்களே...” என்று அங்கு வந்த சத்யா என்ற மற்றொரு பெண் சிங்காரவேலுவை கணவர் என்றும் தங்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறதென்றும் கூறி கதறி அழுததால் இரு தரப்பு உறவினர்கள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும் குழம்பிப் போனார்கள்.

என்ன நடந்தது என்று இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது, காவியா என்ற மற்றொரு பெண் அங்கு அழுதுகொண்டு வந்ததால் தலையில் கை வைத்துக் கொண்டனர் காவல்துறையினர். அதன்பிறகு மூன்று தரப்பினரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தியபோதுதான் முடிச்சுகள் அவிழத் தொடங்கியது. தர்மபுரி மாவட்டம், தடங்கம் காளிக்கவுண்டன் வீதியைச் சேர்ந்த சிவா என்பவரின் மகன் சிங்காரவேலு, வயது 32. அழகுக் கலை நிபுணரான இவர், இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகளைக் கொண்ட பிரபல அழகுக்கலை நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். அதனால் அவ்வப்போது பல ஊர்களில் இருக்கும் கிளைகளுக்குச் சென்று தங்கி பணியாற்றி வந்தார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தன் அத்தை மகளான சத்யா என்ற பெண்ணைக் காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.

அழகுக் கலை நிபுணர்
அழகுக் கலை நிபுணர்
அ.குரூஸ்தனம்

2 ஆண்டுகள் கழித்து சிங்காரவேலு தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் மற்றொரு கிளைக்கு மாற்றப்பட்டார். அப்போது தனலட்சுமி என்ற பெண்ணுடன் சிங்காரவேலுவுக்கு நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறியதால் ஏற்பட்ட நெருக்கத்தால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கும் 2 குழந்தைகள் பிறந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு மதுரையில் உள்ள கிளைக்கு மாற்றப்பட்டார் சிங்காரவேலு. அங்கு பெற்றோரை இழந்த காவ்யா என்ற 20 வயதுடைய பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்தது. அவரைத் திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோது சிங்காரவேலுவை புதுச்சேரி கிளைக்கு மாற்றியது நிர்வாகம். அதனால் காவ்யாவை தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்துவிட்டு புதுச்சேரி வந்தவர் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கினார்.

அப்போது ``தனியாக வீடு பார்க்கிறேன். புதுச்சேரிக்கு வா” என்று காவ்யாவை குடும்பம் நடத்த அழைத்திருக்கிறார் சிங்காரவேலு. ``நான் வருகிறேன். ஆனால் முதலில் பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம்” என்று நிபந்தனை விதித்திருக்கிறார் காவ்யா. இதனால் கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நிலவி வந்திருக்கிறது. இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு ``பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம். திங்கள் கிழமை புதுச்சேரிக்கு வா” என்று காவ்யாவை அழைத்த சிங்காரவேலு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனை
புதுச்சேரி அரசு மருத்துவமனை
அ.குரூஸ்தனம்

அதிகாலை 3 மணிக்கு காவ்யா தூக்கம் வருவதாகக் கூறி போனை வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அதன்பிறகுதான் சிங்காரவேலு தொலைக்காட்சிக் கேபிளை மின் விசிறியில் மாட்டி தூக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் சக ஊழியர்கள் பார்க்க வந்தபோதுதான் சிங்காரவேலு தற்கொலை செய்த விவகாரம் தெரியவந்தது. இறுதியாக சிங்காரவேலுவின் உடல் முதல் மனைவி சத்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.