Published:Updated:

புதுக்கோட்டை: மருத்துவ பரிசோதனை; தப்பியோடிய கைதி! - அதிர்ச்சி கொடுத்த சிறுமி வழக்கு

கைதி ராஜா
கைதி ராஜா

மருத்துவ பரிசோதனை முடிந்து காவலர்கள் பாதுகாப்பில் ராஜா தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில், அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் மகளான 7 வயதுச் சிறுமி, வீட்டின் அருகே பட்டாம்பூச்சி போல விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூ வியாபாரி ராஜா, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சினிமா பிரபலங்களும் மகளிர் அமைப்புகளும் கொந்தளித்தன.

கைதி
கைதி
மாதிரிப் படம்

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த முதலமைச்சர், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்வதாகவும் குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கினார்.

இந்த வழக்கில் கைதான ராஜா மீது போக்ஸோ உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்த போலீஸார் கடந்த 3-ம் தேதி ராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், மருத்துவ பரிசோதனைக்காகச் சிறையிலிருந்த ராஜாவை இரண்டு காவலர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

தஞ்சை: பாலியல் வழக்கில் கைதான பெண்! - காப்பாற்ற முயன்ற போலீஸார்; கறார் காட்டிய கலெக்டர்

அங்கு பரிசோதனை முடிந்து காவலர்கள் பாதுகாப்பில் ராஜா தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில், அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். கைவிலங்கை அவிழ்த்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த வெளிநோயாளிகளுடன் சேர்ந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அருகே இருந்த காப்புக்காட்டுக்குள் ஓடி மறைந்தார். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தப்பியோடிய ஓடியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேரடியாகக் களத்தில் இறங்கிய எஸ்.பி உட்பட போலீஸார் குற்றவாளியைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

விசாரணைக் கைதி ராஜா
விசாரணைக் கைதி ராஜா

மருத்துவமனையைச் சுற்றிலும் காப்புக்காடு என்பதால், காப்புக்காட்டிற்குள்தான் குற்றவாளி பதுங்கி இருக்க வேண்டும் என்ற கோணத்தில், போலீஸார் தேடினர்.

மேலும், அருகே உள்ள முள்ளூர், புதுராஜாப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிக்குள் போலீஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, குற்றவாளி ராஜாவை திருமயம் அருகே உள்ள கலியாபட்டி என்ற கிராமத்தில் வைத்து மீண்டும் பிடித்துவிட்டதாகவும், போலீஸார் அவரை ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையிலிருந்து விசாரணைக் கைதி தப்பித்து ஓடிய சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு