Published:Updated:

`பாதி விலையில் புல்லட், சொகுசுக் கார்கள்!' -புதுக்கோட்டையை குறிவைத்த ராஜஸ்தான் ஆசாமி

மோசடியில் ஈடுபட்டதாக சொல்லப்படும் நபர்
மோசடியில் ஈடுபட்டதாக சொல்லப்படும் நபர்

பாதி விலைக்கு புல்லட் பைக் கிடைக்கிறது என்ற பேராசையால், கணேஷ்குமார் அந்த நபரின் வார்த்தைகளுக்கேற்ப கேட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமலை சமுத்திரபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். புல்லட் பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை கொண்ட இவர் ஓஎல்எக்ஸில் புல்லட் வாகனம் விற்பனைக்கு உள்ளதா என்று தேடியுள்ளார். கணேஷ்குமாரின் தேடலைத் தெரிந்துகொண்ட நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் கணேஷ்குமாருடன் நட்பை ஏற்படுத்திக்கொள்கிறார்.

தொடர்ந்து, தான் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தன்னிடம் ஒரு புல்லட் பைக் இருப்பதாகவும் அதை ஓஎல்எக்ஸில் பாதி விலைக்கு விற்க இருப்பதாகவும் கூறியுள்ளார். ரூ.1.60,000 மதிப்புள்ள புல்லட் பைக்கை பாதி விலையான 80,000 ரூபாய்க்குத் தருகிறேன் என்றும் கூறியுள்ளார். `பணத்தைக் கொடுத்துவிட்டால், பார்சல் சர்வீஸ் மூலம் உடனே பைக்கை அனுப்பி வைக்கிறேன்' என்றும் கூறியுள்ளார்.

பாதி விலைக்கு புல்லட் பைக் கிடைக்கிறது என்ற பேராசையால், கணேஷ்குமார் அந்த நபரின் சொல்படியே கேட்டுள்ளார். கூகுள் பே மூலம் அந்த நபருக்கு ரூ.80,200 பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும், அடுத்த நாள் வரையிலும் பார்சலில் வாகனம் எதுவும் வரவில்லை. அதன்பிறகு அந்த நபரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து, தான் ஏமாந்தது குறித்து கணேஷ்குமாருக்குத் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கணேஷ்குமார், கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஏமாற்றிய நபர் எனச் சொல்லப்படுபவர்
ஏமாற்றிய நபர் எனச் சொல்லப்படுபவர்

சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் தற்போது போலீஸார் அந்த நபரைத் தேடிவருகின்றனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ``ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் என்பவர்தான் ராணுவ அதிகாரி போல நடித்து லட்சக்கணக்கில் பலரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் முகவரியை ஆதாரமாகக் கொண்டு அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``இதுபோன்ற ஆன்லைன் மோசடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொருளை நேரடியாகப் பார்க்காமல் ஆன்லைனில் பணப் பணிமாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என அந்த நிறுவனமே தொடர்ந்து அறிவுறுத்துகிறது. ஆனால், பணத்தை அனுப்பி ஏமாறுகின்றனர்.

`1 லட்ச ரூபாய் பைக் 25,000; அதிர்ச்சி எஸ்.எம்.எஸ்!' - 13 டூவீலர்களோடு சிக்கிய சென்னை டிரைவர்

கடந்த 6 மாதங்களுக்கும் முன்பும் இதேபோல், தான் ராணுவ அதிகாரி என்றும் தன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த காரை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த ஒருவரிடம் 7.50 லட்ச ரூபாயை மோசடி செய்துள்ளார்.

புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிலும் இந்த மோசடி நபருக்குத் தொடர்பு இருக்கிறது. இதேபோல், புதுக்கோட்டை, திருச்சி, சென்னை என தமிழகம் முழுவதும் இவர் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளியைக் கைது செய்வோம்" என்றனர்.

`பூட்டை உடைக்காமல் பைக் திருட்டு; மெக்கானிக் ஷெட்டாக மாறிய வீடு!' -தடம் மாறிய சென்னை இன்ஜினீயர்
அடுத்த கட்டுரைக்கு