Published:Updated:

புதுக்கோட்டையில் நடந்து வந்த பாலியல் தொழில்!- போலீஸாரின் ரகசிய ஆபரேஷனால் சிக்கிய 13 பேர்

விபசாரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது
விபசாரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

புதுக்கோட்டையில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 13 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் தொழில் நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாருக்கு அடுத்தடுத்து புகார் வந்தன. எஸ்.பி உத்தரவின் பேரில், உதவி கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறப்புத் தனிப்படையில் திருக்கோகர்ணம் போலீஸாரும் இடம்பெற்றிருந்தனர். திருக்கோகர்ணம், கணேஷ் நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட அன்னை அபிராமி நகர், பெரியார் நகர், ராஜகோபாலபுரம், காந்தி நகர், சின்னப்பா நகர், டைமண்ட் நகர், மச்சுவாடி, டி.வி.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், பாலியல் தொழில் நடந்த வீடுகளை அடையாளம் கண்டனர். அங்கு தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண்கள், 8 ஆண் புரோக்கர்கள் என மொத்தம் 13 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும், அவர்கள் விபசாரத்துக்குப் பயன்படுத்திய 4 கார்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ரூ.3,500 பணமும் கைப்பற்றப்பட்டது.

புதுக்கோட்டையில் நடந்து வந்த பாலியல் தொழில்!- போலீஸாரின் ரகசிய ஆபரேஷனால் சிக்கிய 13 பேர்

தொடர்ந்து அவர்களைப் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக அருண்சக்திகுமார் பொறுப்பேற்றதிலிருந்து அதிகாலையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன, லாட்டரி சீட்டு விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வரிசையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீஸார் கூறும்போது, ``மிகவும் ரகசியமாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எஸ்.பி உத்தரவின் பேரில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ரகசிய சோதனை மேற்கொண்டதால், கூண்டோடு சிக்கியுள்ளனர். தொடர்ந்து, இன்னும் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ள உள்ளோம். பாலியல் தொழில் நடப்பது குறித்து தகவல் கிடைத்தால், உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கலாம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு