Published:Updated:

`அவங்க கடையில பொருள் வாங்கினால் கொரோனா வரும்..?!’ -இஸ்லாமியர்களுக்கு எதிராக வதந்தி பரப்பியவர் கைது

வதந்தி பரப்பிய இளைஞர்
வதந்தி பரப்பிய இளைஞர்

இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள்கள் வாங்கினால், கொரோனா வைரஸ் பரவும் என வதந்தி பரப்பிய இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்களிடம் வதந்திகள் சென்றடைந்துவிடக்கூடாது என்பதில், கூடுதல் கவனம் எடுத்துவருகிறது.

இதற்காக, சில அதிரடி நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் `இஸ்லாமியர்களின் கடைகளில் மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கினால் கொரோனா வைரஸ் பரவும். அவர்களின் கடைகளில் யாரும் பொருள்கள் வாங்காதீர்கள்" என்ற பதிவு பரவி வந்தது. வாட்ஸ் அப்பில் பல குரூப்களில் இந்தத் தகவல் உலா வரவே, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த சிலர் இதுபற்றிக் கறம்பக்குடிக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மங்களாகோவில் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்(33) என்ற இளைஞர்தான் வதந்தி பரப்பியது தெரியவந்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட பெரும்பாலானோர்க்குக் கொரோனா தொற்று இருந்ததால், அந்த அடிப்படையிலேயே வதந்தி பரப்பி உள்ளார் என்று போலீஸார் கூறுகின்றனர். இதையடுத்து, கார்த்திக்கைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸார் கூறும்போது, "வதந்தி பரப்பிய இளைஞர் எந்தக் கட்சிக்கும் சார்புடையவர் இல்லை. ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், சமூகவலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் இவர் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இதுபோன்ற வதந்தியைப் பரப்பி உள்ளார். தொடர்ந்து, அவரிடம் இதுபற்றி விசாரித்து வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு