Published:Updated:

`புதுக்கோட்டையில் குடோன்; சிவகங்கைக்கு சப்ளை!' - சோதனையில் சிக்கிய 400 கிலோ குட்கா

புதுக்கோட்டை இளைஞர் கைது
புதுக்கோட்டை இளைஞர் கைது

புதுக்கோட்டையில் உள்ள ஒரு குடோனில் இருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு குட்கா பொட்டலங்களைப் பதுக்கி கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார் சிக்கிய ஓட்டுநர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி- காரைக்குடி சாலையில் அமைந்துள்ள சுதந்திரபுரம் சோதனைச் சாவடியில் கே.புதுப்பட்டி எஸ்.ஐ வேலுச்சாமி, காவலர் வினோத் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்குச் சென்ற வேன் அதிவேகமாகச் சென்றுள்ளது. வேனை பூவரசக்குடியைச் சேர்ந்த ஆனந்த் (28) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். உடனே அந்த வேனை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அப்போது வேனில் 400 கிலோ அளவிலான குட்கா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, டிரைவரிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுக்கோட்டையில் உள்ள ஒரு குடோனில் இருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு குட்கா பொட்டலங்களைக் கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

குட்கா
குட்கா
Representational Image

இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 400 கிலோ குட்கா மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த குட்கா பொட்டலங்களின் மதிப்பு ரூ.80,000 வரையிலும் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``இங்குள்ள பகுதிகளில் குட்கா அதிகளவில் பதுக்கிக் கொண்டுசெல்லப்படுவதாகத் தொடர்ந்து புகார் வந்ததால்தான் இந்தக் கொரோனா நேரத்திலும் சோதனையை அதிகரித்தோம். வேனில், கண்டுபிடிக்க முடியாத வகையில் மிகவும் தந்திரமாகப் பதுக்கி குட்கா பொட்டலங்களை எடுத்து வந்துள்ளனர். ஆனாலும், விடவில்லை தொடர்ந்து சோதனை நடத்தி கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து, வாகன சோதனையைத் தீவிரப்படுத்த உள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு