Published:Updated:

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை?- காதலன் கண்ணீருடன் எஸ்.பியிடம் புகார்

காதல் ஜோடி
காதல் ஜோடி

இருவருக்கும் திருமண வயது பூர்த்தியடையாததால், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று போலீஸார் கூறியுள்ளனர்.

புதுக்கோட்டை அருகே தோப்புக்கொல்லையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விவேக் (20). பெயின்டர் வேலை செய்து வருகிறார். திருவரங்குளத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் என்பவரது மகள் சாவித்திரி (19). இவர் புதுக்கோட்டை அரசுக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். விவேக்கும், சாவித்திரியும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சாவித்திரியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்குத் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், குறிப்பாக, சாவித்திரியின் வீட்டார் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சாவித்திரிக்கு வேறு ஒருவருடன் திடீர் திருமண ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். வேறு ஒருவரைத் திருமணம் செய்வதற்குப் பிடிக்காத சாவித்திரி உடனே விவேக்கிடம் போனில், இங்கிருந்து தன்னை எங்காவது அழைத்துச் சென்று உடனே திருமணம் செய்துகொள்ளும் படி கூறியுள்ளார்.

புகார்
புகார்

இதையடுத்து, வெளியூர் சென்று திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்த இருவரும், நண்பர்கள் உதவியுடன் வீட்டிலிருந்து கடந்த 7ம் தேதி வாடகைக் கார் எடுத்து கோயம்புத்தூர் புறப்பட்டனர். கோயம்புத்தூரில் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டனர். இந்த நிலையில்தான் கார், கரூர் மாவட்டம் குளித்தலை வழியாகச் சென்ற போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார் இவர்களின் காரை சோதனை செய்து விசாரித்தனர். இதில், விவேக்கிற்குத் திருமண வயது பூர்த்தியடையவில்லை என்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமண வயது பூர்த்தியடையாததால், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று போலீஸார் கூறியுள்ளனர். இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, இருவரின் பெற்றோரையும் வரவழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி, இருவரையும் தனித்தனியாகப் பிரித்து அனுப்பிவைத்தனர். அப்போது,சாவித்திரி போலீஸாரிடம், என்னைப் பெற்றோருடன் அனுப்பிவைத்தால், கொலை செய்துவிடுவார்கள் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், சாவித்திரி கடந்த 10ம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். ஆனால், பெற்றோர்கள், சாவித்திரி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி காவல் நிலைத்திற்குத் தகவல் கூடச் சொல்லாமல், உடலை எரித்துவிட்டனர். இதுபற்றி தகவலறிந்து அதிர்ச்சியடைந்த விவேக், சாவித்திரியை அவர்களின் பெற்றோர் ஆணவக்கொலை செய்து எரித்துவிட்டனர் என்று கூறி மாதர் சங்கத்தினர் உதவியுடன் மாவட்ட எஸ்பி அருண்சக்தி குமாரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், சாவித்திரி தற்கொலை செய்திருக்கக் கண்டிப்பாக வாய்ப்பில்லை. திட்டமிட்டுப் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்' என்று மனுவில் தெரிவித்திருந்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி எஸ்பி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி உத்தரவிட்டார். திருவரங்குளம் வி.ஏ.ஒ இளையராஜா அளித்த புகாரின் பேரில் சாவித்திரியின் தாய் சாந்தி உட்பட ஏழுபேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை?-  காதலன் கண்ணீருடன் எஸ்.பியிடம் புகார்

மாதர் சங்கத்தினர் கூறும்போது,``உறவினர்களால்தான் பட்ட கஷ்டங்களையும், காயங்களையும் போலீஸாரிடம் சாவித்திரி காண்பித்துள்ளார். பெற்றோரோடு அனுப்பினால் தன்னைக்கொலை செய்து விடுவார்கள், அவர்களுடன் என்னை அனுப்பாதீர்கள் என்று அவர் கெஞ்சியும், மனமிறங்காத போலீஸார் அவரை வலுக்கட்டாயமாகப் பெற்றோரோடு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது சாவித்திரி கொலை செய்யப்பட்டு எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளார். சாவித்திரியின் இறப்புக்குக் குளித்தலைக் காவல் நிலையம்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறுகின்றனர்.

இதுபற்றி குளித்தலை இன்ஸ்பெக்டர் திருமலைராஜனிடம் கேட்டபோது, ``இருவரிடம் விசாரித்த போது, இவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறினர். விவேக்கிற்கு 21வயது நிரம்பவில்லை. இன்னும் 4 மாதம் வரையிலும் இருப்பதால், சட்டத்திற்கு உட்பட்டு 21வயது நிரம்பியவுடன் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறினேன். அதன்பின்புதான் பெற்றோர்களை வரவழைத்தோம். சாவித்திரி அவர்களது பெற்றோருடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்த பிறகுதான் அவரை அனுப்பிவைத்தோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு