Published:Updated:

புதுக்கோட்டை: முன்விரோதம்; தொழில்போட்டி! தி.மு.க நிர்வாகி படுகொலை; சிக்கிய அ.தி.மு.க பிரமுகர்

அ.தி.மு.க பிரமுகர் உட்பட 11 பேர் கைது
அ.தி.மு.க பிரமுகர் உட்பட 11 பேர் கைது

கொலை செய்யப்பட்ட பாலச்சந்திரனும், அவரின் நண்பர் பாலமுத்துவும் கடந்த பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். தொழில் போட்டியால் பகை ஏற்பட்டு நட்பு முறிந்திருக்கிறது. இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த பாலச்சந்திரன் (37). மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். ரியல் எஸ்டெட் தொழிலில் இருந்த அவர், கட்டப் பஞ்சாயத்தும் செய்துவந்திருக்கிறார்.

பாலச்சந்திரனுக்கு வரும் 30-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர், மாத்தூரிலுள்ள தனது தோட்டத்தில் இருந்திருக்கிறார். அப்போது, கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. காரிலிருந்து முகமூடி அணிந்திருந்த 10 பேர் கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கியிருக்கிறது.

பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்

சுதாரித்துத் தப்பியோட முயன்ற பாலச்சந்திரனை மடக்கிப் பிடித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறது அந்தக் கும்பல். படுகாயமடைந்தவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய மாத்தூர் போலீஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலையாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்றுவந்தது.

திருவள்ளூர்: காரில் வந்த 8 பேர் கும்பல் - நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை!

பாலச்சந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அதே பகுதியைச் சேர்ந்த அவரின் முன்னாள் நண்பரான பாலமுத்து, முகமது, ஜெயபிரகாஷ், சேக் அப்துல்லா,பாலாஜி, நந்தகுமார், சதீஷ்குமார், முருகானந்தம், நீலேஷ், சேகர், விக்னேஷ் உள்ளிட்ட 11 பேரை போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாலச்சந்திரனும், அவரின் நண்பர் பாலமுத்துவும் கடந்த பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

பாலமுத்து
பாலமுத்து

பாலமுத்து அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கிடையே நட்பில் விரிசல் ஏற்பட்டு, பிரிந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் தொழில் போட்டியும் இருந்திருக்கிறது. அதனால் இவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில்தான் முன்விரோதம் காரணமாக பாலச்சந்திரனை வெட்டிப் படுகொலை செய்திருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் போலீஸார் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு