Published:Updated:

புதுக்கோட்டை:`கொஞ்ச நாள்ல மகளோட திருமணம்!’ - நகைத் திருட்டால் கலங்கும் குடும்பம்

கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம்
கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம்

``மகளின் திருமணத்துக்காகக் குருவி சேகரிப்பது போல், நகையைச் சேகரித்து வைத்திருந்தேன். இப்போ, மகளின் திருமணத்தை எப்படி நடத்தப்போகிறேன் என்று தெரியவில்லை’’ என்று தங்கராஜ் புலம்பித் தவிக்கிறார்.

அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்து, தற்போது ஊரில் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் நித்யாவுக்கு இன்னும் சில தினங்களில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய இருந்த நிலையில், திருமணத்திற்காக வாங்கியிருந்த 30 பவுன் தங்க நகையை வீட்டுப் பீரோவில் வைத்திருந்துள்ளார்.

Representational Image
Representational Image

நித்யாவை நல்லபடியாகத் திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்று ஊருக்குக் கூட வராமல் பல வருடங்களாக வெளிநாட்டில் சம்பாதித்து நகை, பணம் சேர்த்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஊரில் இருக்கிறார். இந்தநிலையில், இரவு தங்கராஜ் மற்றும் அவரது மனைவி மாடிக்கு உறங்கச் சென்றனர். கீழே வீட்டில் நித்யா மற்றும் அவரது சகோதரர் இருவரும் இருந்துள்ளனர். இருவரும் கதவை தாழ்ப்பாலிடாமல் உறங்கியதாகக் கூறப்படுகிறது.

சிவகங்கை: `கத்தியுடன் நுழைந்த 7 பேர்’ - விமானப்படை வீரர் வீட்டில் பணம், நகை கொள்ளை

இந்தநிலையில்தான், திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். காலை விடிந்ததும் வீட்டிற்குள் வந்தவுடன் பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்கராஜ் அன்னவாசல் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

நகை திருட்டு
நகை திருட்டு

தொடர்ந்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணனுக்குத் தகவல் தெரிவிக்கவே, மாவட்ட எஸ்பி, இலுப்பூர் டிஎஸ்பி அருள்மொழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு, மர்ம நபர்களைப் போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். ``மகளின் திருமணத்திற்காகக் குருவி சேகரிப்பது போல், நகையைச் சேகரித்து வைத்திருந்தேன். மகளின் திருமணத்தை எப்படி நடத்தப்போகிறேன் என்றே தெரியவில்லை’’ என்று தங்கராஜ் புலம்பித் தவிக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு