Published:Updated:

`மது கிடைக்காமல் போனதற்குக் கொரோனாதான் காரணம்!' - விபரீத முடிவெடுத்த புதுக்கோட்டை லாரி டிரைவர்

Representational Image
Representational Image

மது கிடைக்காமல் போனதற்குக் கொரோனாதான் காரணம் என்று நண்பர்களிடம் சொல்லிப் புலம்பித் தீர்த்த கருப்பையா மது கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா(48). இவர் அறந்தாங்கிப் பகுதியில் ஆக்டிங் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி இறந்ததிலிருந்து வீட்டிற்குச் செல்லாமல் அறந்தாங்கியில், லாரியிலும், சாலையோரங்களிலும் தங்கி இருந்துள்ளார்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை மதுவிற்காகச் செலவிடுவார் என்று கூறப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. மது கிடைக்காமல் போனதற்குக் கொரோனாதான் காரணம் என்று நண்பர்களிடம் அவர் சொல்லிப் புலம்பியதாகக் கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட கருப்பையா
தற்கொலை செய்து கொண்ட கருப்பையா

லாரியும் ஓட்ட முடியவில்லை, மதுவும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மனஉளைச்சலுக்கு ஆளான கருப்பையா, தான் தங்கியிருந்த லாரி செட் அருகில் உள்ள மரத்தில் வேட்டியைக் கொண்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

முக்கியக் கடைவீதிப் பகுதி என்பதால், இதைப் பார்த்த இளைஞர் ஒருவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கருப்பையாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டினத்தில் மது கிடைக்கவில்லை என்று மாற்றுப்போதைக்காக, குளிர்பானத்தில் சேவிங் லோஷனைக் கலந்து குடித்து 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மதுகிடைக்காத விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு