புதுக்கோட்டை: ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை! - ஆசிரியருக்கு 65 ஆண்டுகள் சிறை

மாணவிகள் புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது தலைமையாசிரியர் நடவடிக்கை எடுக்காததால், அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே நரியன்புதுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தவர் அன்பரசன் (53). கடந்த 2018-ம் ஆண்டு, மார்ச் மாதம் இந்தப் பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அன்பரசன் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். `இது பற்றி வெளியே எங்கேயும் சொல்லக் கூடாது’ என்று மாணவியை மிரட்டியிருக்கிறார். ஆனாலும், மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூற, பெற்றோர் இது குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளியிலுள்ள மாணவிகள் மேலும் சிலருக்கும் அன்பரசன் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதே பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிவந்த ஞானசேகரன், இது பற்றித் தெரிந்தும் அன்பரசன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, அன்பரசன், ஞானசேகரன் இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாகப் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி சத்யா இருவருக்கும் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அதில், ஆசிரியர் அன்பரசனுக்கு போக்சோ சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ் 21ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.15,000 அபராதமும் விதித்தார். அதைக் கட்டத் தவறினால், தலா இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், போக்சோ சட்டத்தின் மற்றொரு பிரிவின் கீழ் 42 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதித்தார். 506 பிரிவின் கீழ் அன்பரசனுக்கு மேலும் இரண்டு வருடச் சிறைத் தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மொத்தமாக ஆசிரியர் அன்பரசனுக்கு 65 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதேபோல், மாணவிகள் புகார் கொடுத்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது தலைமையாசிரியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, தலைமையாசிரியர் ஞானசேகரனுக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிபதி, தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.