Published:Updated:

புதுக்கோட்டை: தீர்ப்புக்கு முன் மாயமான குற்றவாளி! - தண்டனைக்கு பயந்து தற்கொலை?

மாயமான குற்றவாளி - தண்டனைக்கு பயந்து தற்கொலை?
மாயமான குற்றவாளி - தண்டனைக்கு பயந்து தற்கொலை?

17 வயது சிறுமிக்குப் பாலியல்தொல்லை கொடுத்ததாகக் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி, தீர்ப்பு கொடுப்பதற்கு முன்பு தண்டனைக்கு பயந்து விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (40). இவர் கடந்த 2019-ல் வயலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தச் சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், போக்சோ சட்டத்தின்கீழ் திருநாவுக்கரசுவைக் கைதுசெய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததால், திருநாவுக்கரசு வெளியே வந்தார்.

திருநாவுக்கரசு
திருநாவுக்கரசு

இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிக்கப்பட்டு பிப்ரவரி 4-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவிருந்தது. இதற்காக நீதிமன்றத்துக்குத் திருநாவுக்கரசு வந்திருந்தார். தீர்ப்பு கொடுப்பதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பு திருநாவுக்கரசு நீதிமன்றத்திலிருந்து திடீரென மாயமானார். நீதிமன்றம் முழுவதும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அவர் ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மாயமான திருநாவுக்கரசை போலீஸார் தேடிவந்தனர். இந்தநிலையில், அன்னவாசல் அருகே பரம்பூர் டாஸ்மாக் கடையில் திருநாவுக்கரசு இறந்துகிடப்பதாகக் கிடப்பதாக அன்னவாசல் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், `கடந்த சில தினங்களாகவே தனக்குக் கண்டிப்பாக ஆயுள் சிறைத் தண்டனை கொடுத்துவிடுவார்கள் என்ற பயத்திலேயே திருநாவுக்கரசு இருந்திருக்கிறார். தீர்ப்புக்கு பயந்துதான் நீதிமன்றத்திலிருந்து மாயமாகியிருக்கிறார். எப்படியும், தண்டனை கிடைத்துவிடும். அதற்குத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு மதுவில் விஷத்தைக் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் முழு விவரமும் தெரியவரும். இது குறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருநாவுக்கரசு
திருநாவுக்கரசு

`தமிழகத்தையே உலுக்கிய புதுக்கோட்டை 7 வயது சிறுமி பாலியல் தொல்லை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நடந்த ஆறு மாதங்களுக்குள் குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகளைப் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கொடுத்திருந்தது. தொடர்ந்து, அதிரடித் தீர்ப்புகளையும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கொடுத்துவருகிறது. இது போன்ற தீர்ப்புகள் தொடர்ந்து குற்றங்களைக் குறைக்கும்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு