Published:Updated:

`உன்னால முடிஞ்சத செஞ்சுக்க!' - புதுக்கோட்டையில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரிச் சீட்டு விற்பனை

லாட்டரி சீட்டுகளுடன்
லாட்டரி சீட்டுகளுடன்

`ரூ.1,000 மதிப்பிலான, நல்ல நேரம், தங்கம்னு லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தேன். அனைத்தையும் இப்போது, காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டேன்'.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் பூபதி கார்த்திகேயன். திராவிட விடுதலைக் கழக மாவட்ட அமைப்புச் செயலாளராக உள்ளார். கையில் பலவிதமான தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளுடன் வந்த இவர் லாட்டரி சீட்டுகளுடன் காவல் கண்காணிப்பாளரிடமும் மனுகொடுத்தார். அந்த மனுவில்,``கறம்பக்குடி பகுதிகளில் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பொதுமக்கள் கூடும் இடங்களில் வெளிப்படையாக லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. கறம்பக்குடி காவல் நிலையத்துக்கு லாட்டரி சீட்டு விற்பனையாளர்களிடம் இருந்து மாமூல் போகிறது. குறிப்பாக, கறம்பக்குடி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் உளவுத்துறை காவலர் மணிகண்டன் ஆகிய இருவரும் லஞ்சம் பெற்றுக்கொண்டு தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைத் தாராளமாக விற்க அனுமதித்து இருக்கின்றனர்.

லாட்டரி சீட்டுகளுடன்மனு
லாட்டரி சீட்டுகளுடன்மனு

தினமும் உழைக்கின்ற ஏராளமான கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் லாட்டரிச் சீட்டுகளால் நடுத்தெருவில் நிற்கின்றன. லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாகத் தடை செய்வதுடன், லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதிக்கும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே இதுபற்றி பேசிய பூபதி கார்த்திகேயன், ``மார்க்கெட்டுகளில் வெளிப்படையாகக் கூப்பிட்டு விற்கிறாங்க. இதுபற்றி விற்கிறவங்ககிட்ட கேட்டால், காவல் நிலையத்துக்கு வாரா, வாரம் மாமூல் போகுதுன்னு சொல்றாங்க. `உன்னால முடிஞ்சத செஞ்சுக்கன்'னு சொல்றாங்க.

அதுக்கப்புறம்தான் ரூ.1,000 மதிப்பிலான, நல்ல நேரம், தங்கம்னு லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தேன். அனைத்தையும் இப்போ, காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டேன். மூணு சீட்டு விற்பனையும் கொடிகட்டிப் பறக்குது. இதைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்தான் நடவடிக்கை எடுக்கணும்" என்கிறார்.

லாட்டரி சீட்டை தடை செய்ய லாட்டரி சீட்டுகளுடன் வந்த இளைஞர்
லாட்டரி சீட்டை தடை செய்ய லாட்டரி சீட்டுகளுடன் வந்த இளைஞர்

இதுபற்றி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது, ``தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல், தடுப்பது அவதூறு ஏற்படுத்துவது போன்ற செயல்களை அவர் செய்து வருகிறார். கறம்பக்குடி பகுதியில் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் லாட்டரி விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு