Published:Updated:

புதுக்கோட்டை: கணவன், மனைவி தகராறு; திடீர் மரணம்! - மகள் இறப்பில் சந்தேகிக்கும் பெற்றோர்

இறந்த உமா மகேஸ்வரி கணவர் சிவக்குமார்
இறந்த உமா மகேஸ்வரி கணவர் சிவக்குமார்

இருவரும் கோனாப்பட்டுக்கு வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்துக்குள்ளேயே அவசர அவசரமாக போலீஸாருக்குக்கூடக் கூறாமல், உமா மகேஸ்வரியின் உடலை எரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கண்ணனிப்பட்டியைச் சேர்ந்தவர் காடப்பன். இவரின் மகள் உமா மகேஸ்வரி (23). பி.எஸ்சி படித்திருக்கிறார். திருமயம் அருகே கோனாப்பட்டைச் சேர்ந்த முருகப்பன் மகன் சிவக்குமார் (27) என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உமா மகேஸ்வரியைத் திருமணம் செய்துகொடுத்திருக்கிறார்கள். திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள் சிங்கப்பூருக்குச் சென்ற சிவக்குமார், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். திருமணமான சில தினங்களிலிருந்தே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம்.

திருமயம் காவல்நிலையம்
திருமயம் காவல்நிலையம்

தற்போது, சிவக்குமார் சொந்த ஊரிலிருக்கும் நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்தநிலையில் கடந்த வாரம் இருவருக்குமிடையே நடைபெற்ற தகராறில் உமா மகேஸ்வரி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். சிவக்குமாரின் பெற்றோரும், உறவினர்களும் உமா மகேஸ்வரியின் பெற்றோரைச் சமாதானம் செய்து, உமா மகேஸ்வரியை மீண்டும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ஆனாலும், அன்று இரவே கணவன்-மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இரவே காடப்பனைத் தொடர்புகொண்ட உமா மகேஸ்வரி, தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், அடுத்த நாள் காலை காடப்பனை போனில் தொடர்புகொண்ட முருகப்பன், உமா மகேஸ்வரி தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

சிவக்குமார் - உமா மகேஸ்வரி
சிவக்குமார் - உமா மகேஸ்வரி

மகள் இறந்த செய்தி கேட்டு கண்ணனிப்பட்டியிலிருந்து காடப்பனும், அவருடைய மனைவியும் உடனே கிளம்பி கோனாப்பட்டுக்கு வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்துக்குள்ளேயே அவசர அவசரமாக போலீஸாருக்குக்கூடக் கூறாமல் உமா மகேஸ்வரியின் உடலை எரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தங்கள் மகளை அடித்துக் கொலை செய்திருக்கின்றனர், மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது என்று கூறி, உமா மகேஸ்வரியின் பெற்றோர் திருமயம் போலீஸில் புகார் கொடுத்தனர்.

Vikatan

அவர்களின் புகாரில்,``மகள் தற்கொலை செய்து இறந்துவிட்டதாகக் கூறினர். நேரடியாகச் சென்று பார்த்தபோது, கழுத்து, முகம் போன்ற பகுதிகளில் காயம் இருந்தது. இது பற்றிக் கேட்டபோது, அதற்கு பதில் கூற மறுத்து உடனே யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்வதில் குறியாக இருந்தனர். எங்கள் உறவினர்கள் யாரும் வருவதற்குள் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமல் மகளை எரித்துவிட்டனர்.

திருமயம் காவல்நிலையம்
திருமயம் காவல்நிலையம்

சிவக்குமாருக்குத் தவறான பழக்கம் இருந்திருக்கிறது. அதைத் தட்டிக்கேட்ட எங்கள் மகள் உமா மகேஸ்வரியைத் திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர். உரிய விசாரணை நடத்தி, அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். இது குறித்து திருமயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு