Published:Updated:

`வரதட்சணை கொடுமை, கணவருடன் வாழவிடலை!’- மாமியாருக்குத் தீ வைத்த மருமகள்

இறந்து போன ராஜம்பாள் மற்றும் பிரதீபா
இறந்து போன ராஜம்பாள் மற்றும் பிரதீபா

ராஜம்பாள் தொடர்ந்து வரதட்சணை கேட்டு என்னைக் கொடுமைப்படுத்தி வந்தார். அதோடு, எனது கணவரிடம் சொல்லிக்கொடுத்து அவருடன் என்னைச் சரியாக வாழவிடவில்லை’.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே மணியம் பள்ளத்தைச் சேர்ந்தவர் அரங்குளவன். இவரது மனைவி ராஜம்பாள்(57). இவர்களது மகன் ராமேஷுக்கும், பிரதீபா என்பவருக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 9 மாதப் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ராஜம்பாளும், ரமேஷும் தனித்தனியாக அருகருகே வசித்து வந்துள்ளனர். மருமகள் வீட்டிற்கு வந்து இரண்டு வருடமாகியும், மருமகளிடம் ராஜம்பாள் தொடர்ந்து வரதட்சணை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

மாமனார், கொழுந்தன் கொலை; கணவர் மாயம்!- மாமியார் கடத்தலால் சென்னைப் போலீஸை மிரளவைத்த மேனகா

இதுபற்றி தனது பெற்றோர் மற்றும் கணவரிடம் பலமுறை கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதனால்,கடந்த சில தினங்களாகவே விரக்தியில் இருந்துள்ளார். இதற்கிடையேதான், ஓட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜம்பாள், திடீரென அலறல் சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, வீட்டுடன் சேர்த்து ராஜம்பாள் தீயில் எரிந்துகொண்டிருந்தார். தீயை அணைத்து ராஜம்பாளைப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜம்பாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து வல்லத்திராக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். மாமியார் இறந்ததிலிருந்து பிரதீபா ஒருவித பதற்றத்துடனே இருந்துள்ளார். இதையடுத்து பிரதீபாவிடம் போலீஸார் கிடிக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், `ராஜம்பாள் தொடர்ந்து வரதட்சணை கேட்டு என்னைக் கொடுமைப்படுத்தி வந்தார். அதோடு, எனது கணவரிடம் சொல்லிக் கொடுத்து அவருடன் என்னைச் சரியாக வாழவிடவில்லை.

இறந்து போன ராஜம்பாள் மற்றும் பிரதீபா
இறந்து போன ராஜம்பாள் மற்றும் பிரதீபா

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன் முடியவில்லை. அதனால்தான் யாரும் இல்லாத நேரத்தில், மாமியார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டேன்’ என்று போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பிரதீபாவை போலீஸார் கைது செய்தனர். பிரதீபா கைது செய்யப்பட்ட நிலையில் 9 மாதக் குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வரதட்சணை கொடுமையால், மாமியாரை மருமகள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு