Published:Updated:

டாஸ்மாக் பாரில் பதுக்கப்பட்ட 2,000 மது பாட்டில்கள்! புதுக்கோட்டை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த 2 பேர்

2,000 மது பாட்டிகள் பறிமுதல்
2,000 மது பாட்டிகள் பறிமுதல்

புதுக்கோட்டையில் தடையை மீறிக் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீஸார் கைது செய்ததுடன், பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2,000 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளான மளிகை, காய்கறிக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், ஊரடங்கு உத்தரவால், கடந்த மாதம் 24ம் தேதி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும், தமிழகம் முழுவதும் பலரும் மொத்தமாக மதுபானங்களை வாங்கி வைத்து, கள்ள மார்க்கெட்டில் திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் அவ்வாறு விற்பனை செய்துவருபவர்களை போலீஸார் வளைத்துப் பிடித்து வருகின்றனர்.

2,000 மது பாட்டிகள் பறிமுதல்
2,000 மது பாட்டிகள் பறிமுதல்

இது ஒருபுறம் என்றால் மறுபுறம் மது கிடைக்காத விரக்தியில் சிலர் மாற்றுப்போதைக்கு முயற்சி செய்து பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இந்தநிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆண்டிகுளம் பகுதியில் கள்ளமார்க்கெட்டில், திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட எஸ்பி அருண்சக்தி குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தடுக்க எஸ்பி உடனே தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீஸார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸார் ஆண்டிக்குளம் காட்டுப்பகுதிக்குச் சென்று அங்கிருந்தவர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, கனகராஜ், கருப்பையா என்பவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூற கிடிக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆண்டிக்குளத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பார் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். அதில், 1985 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அனைத்து பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

2,000 மது பாட்டிகள் பறிமுதல்
2,000 மது பாட்டிகள் பறிமுதல்

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``மாவட்டம் முழுவதும் தடையை மீறிக் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்த உடனே உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரையிலும் 5,000க்கும் அதிகமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளோம். கள்ளத்தனமாக மது விற்கப்படுவது தெரிந்தால், உடனே அருகே உள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு