Published:Updated:

புதுக்கோட்டையில் மொய்ப்பணம் ரூ.4 கோடியைக் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்! - மடக்கிப்பிடித்த வீட்டு ஓனர்

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

புதுக்கோட்டையில் மொய் விருந்து நடத்தி ரூ.4 கோடி மொய்ப் பணம் வசூலித்த வடகாட்டைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி வீட்டில், இளைஞர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மொய் வசூலிக்கப்படும் இடம்
மொய் வசூலிக்கப்படும் இடம்

புதுக்கோட்டையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மொய் விருந்து விழா நடைபெற்று வருகிறது. ஆடி, ஆவணி மாதங்களில் இந்த பகுதிகளில் மொய் விருந்து விழா களைக்கட்டுகிறது. இந்த வருடம் மொய் விருந்து விழா ஆடி 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. மொய் விருந்து விழாவில் அதிகபட்சமாக 8 பேர் வரையிலும் சேர்ந்து மொய் நடத்துகின்றனர். ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.5 கோடி வரையிலும் மொய் வசூலாகிறது.

மொய் வசூலிக்கப்படும் இடம்
மொய் வசூலிக்கப்படும் இடம்

இந்த வருடம் நடைபெற்று வரும் மொய் விருந்தில், விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மட்டும் ரூ.4 கோடி மொய் வசூலாகி இருந்தது. இந்த வருடம் தனி ஒருவருக்கு அதிகபட்சமாகப் பதிவான மொய் வசூல் இதுதான். இந்தநிலையில்தான் ரூ.4 கோடி மொய் வசூல் செய்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி வீட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி தன் குடும்பத்தினருடன், அதிகாலையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ கதவை உடைப்பது போலச் சத்தம் கேட்கவே, சுதாரித்துக் கொண்டு எழுந்து பார்த்திருக்கிறார். அப்போது, இளைஞர் ஒருவர் கதவை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. உடனே, தப்பித்து ஓட முயன்ற அந்த இளைஞரை கிருஷ்ணமூர்த்தி மடக்கிப் பிடித்தார். பொதுமக்கள் திரண்டு கொள்ளையடிக்க முயன்ற அந்த நபரை போலீஸில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட சிவனேசன்.
கைது செய்யப்பட்ட சிவனேசன்.

விசாரணையில், கொள்ளையடிக்க முயன்றது அவ்வயலைச் சேர்ந்த சிவனேசன்(24). என்பது தெரியவந்துள்ளது. இவர் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர் என்றும் கூறப்படுகிறது.

சிவனேசன் வெளிநாடு செல்வதற்காக, பலரிடம் பணம் பெற்றுள்ளதாகவும், வெளிநாடு செல்ல முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தியின் வீடு
கிருஷ்ணமூர்த்தியின் வீடு

இந்தநிலையில் தான் கிருஷ்ணமூர்த்தியின் மொய் வசூல் பணத்தைக் கொள்ளையடுத்து கடனை சரிக்கட்டலாம் என்று திட்டமிட்டு சிவனேசன் கொள்ளை அடிக்க முயன்றுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த கொள்ளை முயற்சி குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனர். இத்தனை வருட கால மொய் வரலாற்றில் மொய் வசூல் செய்த பணத்தை இதுபோன்று யாரும் கொள்ளை முயற்சியில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.