Published:Updated:

புதுக்கோட்டை: காதலியைப் பார்க்க மொட்டைமாடியில் காத்திருந்த காதலனுக்கு நேர்ந்த துயரம்!

கைதுசெய்யப்பட்ட பிரபு
கைதுசெய்யப்பட்ட பிரபு

மகனை வீட்டுக்குக் கூட்டிச் சென்ற காமாட்சி, தலையில் மகனுக்குக் கட்டுப்போட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த நல்லையா பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை, பாலன் நகரைச் சேர்ந்தவர் முத்து. இவரின் மகன் நல்லையா (24). 12-ம் வகுப்பு வரையிலும் படித்துள்ள நல்லையா, கோயம்புத்தூரிலுள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்துவந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலாக அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். இது பற்றி அறிந்த அந்தப் பெண்ணின் அண்ணன் பிரபு, காதலைக் கைவிடுமாறு நல்லையாவைக் கண்டித்திருக்கிறார். ஆனாலும், நல்லையா தன் காதலைக் கைவிடவில்லை. காதலியைப் பார்க்க அவ்வப்போது வேலைபார்க்கும் இடத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்துவிடுவாராம்.

நல்லையா
நல்லையா

விடுமுறையில் ஊருக்கு வந்தவர் யாருக்கும் தெரியாமல் காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். காதலிக்காக வீட்டு மொட்டைமாடியிலேயே பல மணி நேரம் காத்திருந்திருக்கிறார். இரவு ஆகியும் தொடர்ந்து காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே நல்லையா, தன் வீட்டுக்கு வந்ததை அறிந்த பிரபு, வீட்டின் மொட்டைமாடிக்கு வந்து பார்த்திருக்கிறார். அப்போது, மாடியில் நல்லையா இருந்திருக்கிறார். ஆத்திரமடைந்த பிரபு, நல்லையாவைக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். நல்லையாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து, நல்லையாவின் தாய் காமாட்சிக்கு இது பற்றி தகவல் தெரிவித்த பிரபு, `இனிமேல் என் தங்கச்சியைப் பார்க்க இவன் வரக் கூடாது’என்று கூறி எச்சரித்து அனுப்பிவைத்திருக்கிறார். வீட்டுக்குக் கூட்டிச் சென்ற காமாட்சி, தலையில் மகனுக்குக் கட்டுப்போட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்திருக்கிறார். சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த நல்லையா, பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்காக நல்லையாவின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பிரபு
பிரபு

நல்லையாவின் தாய், காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த திருக்கோகர்ணம் போலீஸார், பிரபுவைக் கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

தங்கையைக் காதலித்துவிட்டான் என்பதற்காக, ஆத்திரத்தில் காதலனை அடித்துக் கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு