Published:Updated:

`180 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்; எஸ்.ஐ சஸ்பெண்ட்!’- அதிரடி காட்டிய புதுக்கோட்டை எஸ்.பி

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ ரெக்ஸ் ஸ்டாலின்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ ரெக்ஸ் ஸ்டாலின்

கைதுசெய்யப்பட்ட அவரிடமிருந்து 88 பண்டல்களில், 180 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.27 லட்சம் என்றும் போலீஸார் கூறுகிறார்கள்.

புதுக்கோட்டையிலிருந்து நாமக்கல்லுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணனுக்குக் ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. புதுக்கோட்டை போலீஸாரின் தேடுதல் வேட்டையில், கஞ்சாவைக் கடத்திச் சென்ற ஆரோக்கியதாஸ் என்பவர் கைதுசெய்யப்பட்டார். அரிமளம் அருகே சீராடும் செல்வி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ், பிரபல கஞ்சா கடத்தல் குற்றவாளி என்கிறார்கள் போலீஸார். கைதுசெய்யப்பட்ட அவரிடமிருந்து 88 பண்டல்களில், 180 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. `அவற்றின் மதிப்பு ரூ.27 லட்சம்’ என்றும் போலீஸார் கூறுகிறார்கள். ஆரோக்கியதாஸ் மீது தமிழகம், கேரளா உட்பட 13 காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனவாம்.

கஞ்சா பறிமுதல்
கஞ்சா பறிமுதல்

மேலும், இதில் சம்பந்தப்பட்ட ஆரோக்கியதாஸின் மனைவி, மகன் உட்பட ஆறு பேரை திருக்கோகர்ணம் போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர். போலீஸார் விசாரணையில், 88 பண்டல்கள் அடங்கிய 180 கிலோ கஞ்சாப் பொட்டலங்களை திருமயம் காவல் நிலையத்துக்குட்பட்ட மணவாளன்கரையிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்து, கடத்த முயன்றது தெரியவந்தது. `இந்த விவகாரத்தில் முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறி திருமயம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரெக்ஸ் ஸ்டாலினை மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் சஸ்பெண்ட் செய்து உத்தவிட்டிருக்கிறார்.

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 170 கிலோ கஞ்சா! - மாறுவேடத்தில் மடக்கிப்பிடித்த க்யூ பிரிவு போலீஸார்

கடந்த ஜூலை மாதம் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக பாலாஜி சரவணன் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில தினங்களிலேயே 35 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சியளித்தார். நோட்டீஸில், `தங்கள் சரகத்தில், சட்டத்துக்குப் புறம்பாக மது, கஞ்சா, மணல் கடத்தல், சீட்டாட்டம் போன்ற குற்றச் சம்பவங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை குறிப்பாணை அனுப்பி வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தும், மேற்படி நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கத் தவறிய, மெத்தனப்போக்கான செயலுக்கு ஏன் உங்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கக் கூடாது?’’ என்று கேட்டிருந்தார்.

எஸ்.பி
எஸ்.பி

``இந்தக் குறிப்பாணை கிடைத்த மூன்று நாள்களுக்குள் எழுத்துபூர்வ விளக்கம் அளிக்கவில்லையென்றால், துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனவும் அவர் எச்சரித்திருந்தார். இந்தநிலையில்தான் பணியைச் சரிவரச் செய்யாத காவல் உதவி ஆய்வாளர் மீது எஸ்.பி நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். பாலாஜி சரவணனின் இந்த அதிரடி நடவடிக்கையால், புதுக்கோட்டை போலீஸார் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு