Published:Updated:

`ஷகீர் பஷீர் வாக்குமூலம்.. ஆன்லைன் ஆர்டர்; தொடரும் கைதுகள்!' -என்.ஐ.ஏ விசாரணையில் திடுக் தகவல்கள்

புல்வாமா தாக்குதல்
புல்வாமா தாக்குதல்

ஷகீர் பஷீர் அளித்த தகவலின் அடிப்படையில் ஜம்மு - காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த சிலர் அடுத்தடுத்து கைதாகியுள்ளனர்.

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஷகீர் பஷீர் மாக்ரோ என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி கைது செய்தனர். என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணையில் புல்வாமா தாக்குதலுக்குத் திட்டமிட்டது, அதற்கான பணிகளை மேற்கொண்டது, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக பல்வேறு தகவல்களை ஷகீர் பஷீர் கூறியுள்ளார். ஷகீர் பஷீர் அளித்த தகவலின் அடிப்படையில் ஜம்மு - காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த சிலர் அடுத்தடுத்து கைதாகியுள்ளனர்.

ஷகீர் பஷீர்
ஷகீர் பஷீர்

மார்ச் 3-ம் தேதி புல்வாமாவைச் சேர்ந்த தந்தை - மகள் கைதாகினர். இவர்கள் லெத்போரா பகுதியைச் சேர்ந்த தாரிக் அஹ்மத் ஷா மற்றும் இன்ஷா தாரிக் என்பது தெரியவந்துள்ளது. நள்ளிரவில் இவர்களின் வீட்டில் சோதனை மேற்கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிகாலையில் இருவரையும் கைது செய்தனர். இந்த நிலையில், ஸ்ரீநகரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் இஸ்லாம், முகமது அப்பாஸ் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புல்வாமா சம்பவம் தொடர்பாக கடந்த ஒருவாரத்தில் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2018-ல் விசிட்.. 2019-ல் பிளான்.. பயங்கரவாதியால் வெளிவந்த புல்வாமா தாக்குதல் விவரங்கள்!

தாரிக் அஹ்மத் ஷா கனரக வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். அவரின் மகள் இன்ஷா தாரிக் கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்.ஐ.ஏ விசாரணையில் மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவருக்கு தாரிக் அஹ்மத் ஷா அடைக்கலம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

தாரிக் அஹ்மத் ஷா , இன்ஷா தாரிக்
தாரிக் அஹ்மத் ஷா , இன்ஷா தாரிக்

அதேபோல் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளான முகமது உமர் ஃபரூக், கம்ரான், ஷமீர் அஹமது தார், முகமது இஸ்மாயில் ஆகியோர் இந்த வீட்டைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்கள் 2018 மற்றும் 2019 ஆண்டில் தாரிக் அஹமது ஷாவின் வீட்டில் 15 முறை தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஆயுதங்களை தாரிக் அஹமத் ஷா உதவியுள்ளார். புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு அடில் அகமது தார் பேசிய ஒரு வீடியோவை ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் வெளியிட்டது. இந்த வீடியோவும் தாரிக் அஹமத் ஷா வீட்டில் எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

`அமேசான் மூலம் ஆர்டர்; இரவு முழுவதும் ரெய்டு!' - புல்வாமா வழக்கில் வளைக்கப்பட்ட தந்தை, மகள்

இஸ்லாம், முகமது அப்பாஸ் இருவரும் தீவிரவாதிகளுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் ஐஇடி குண்டுகளைத் தயாரிப்பதற்குத் தேவையான கெமிக்கல்களை அமேசான் மூலம் ஆர்டர் செய்து தீவிரவாதிகளுக்குக் கொடுத்தது தெரியவந்துள்ளது. குண்டுகளைத் தயாரிப்பதற்குத் தேவையான கெமிக்கல்கள், பேட்டரி மற்றும் அம்மோனியம் தூள் போன்றவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து இஸ்லாம் நேரடியாக கொண்டுசென்று தீவிரவாதிகளிடம் ஒப்படைத்தது தெரியவந்துள்ளது.

Representation Image
Representation Image

தீவிரவாதிகள் அமேசான் மூலம் பொருள்களை ஆர்டர் செய்து வாங்கியதாக கடந்த சில நாள்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அமேசான் இந்தியா கூறுகையில், ``நாங்கள் இங்குள்ள சட்ட திட்டத்துக்குக் கட்டுப்பட்டுதான் வணிகம் செய்கிறோம். எங்களிடம் விற்பனையாளர்களின் பட்டியல் அவர்களின் தயாரிப்பு உள்ளிட்ட தகவல்கள் இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட வழக்கு குறித்து நாங்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை. இந்தக் கட்டத்தில் எங்களால் எந்த விவரங்களையும் வழங்க முடியாது. விசாரணைக்காக அதிகாரிகள் எங்களை அணுகினால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம்” எனக் கூறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு