மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேட் தாலுகாவில் இருக்கும் மோய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்சே பன்சோடே. இவர் ஸ்நாக்ஸ் மற்றும் உணவுப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவருக்கு கல்லூரிக்கு செல்லும் சுஜித்(22), அபிஜித்(18) ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 15-ம் தேதியிலிருந்து தனஞ்சேயை காணவில்லை. இதனால் அவரது உறவினர்கள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர்.

போலீஸாரின் விசாரணையில் தனஞ்சேவிற்கு நாக்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் மீறிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. ஃபேஸ்புக் மூலம் அந்தப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. உடனே அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரித்தபோது, அவரிடம் தனது குடும்பத்தினர் தன்னை கொலைசெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தார். அதோடு, இது குறித்து தெரியவந்ததும் வீட்டில் அவரின் மனைவி சண்டையிட்டுள்ளார். ஆனால் அந்த உறவை கைவிட முடியாது என்று தனஞ்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
எனவே தனஞ்சேவின் மனைவி கோபித்துக்கொண்டு புனேயில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீஸார் தனஞ்சேயின் மகன்கள் இரண்டு பேரையும் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தந்தையின் செயலால் அதிருப்தியடைந்து அவரை கொலைசெய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

15-ம் தேதி இரவு தனஞ்சே உறங்கிக்கொண்டிருந்தபோது முதலில் இரும்புக் கம்பியால் தலையில் அடித்ததாகவும், பின்னர் தலையணையால் முகத்தை மூடி மூச்சுத்திணறடித்து கொலைசெய்ததாகவும் தெரிவித்தனர். உடலை பேக்கரியில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தும் பர்னஸ் அடுப்பில் எரித்து விட்டதாகவும், எஞ்சிய பகுதியை எடுத்துச்சென்று ஆற்றில் போட்டுவிட்டதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
இந்தியில் எடுக்கப்பட்ட பாபநாசம் படமான திரிஷயம் படத்தை பார்த்துவிட்டு இந்தக் கொலையைசெய்ததாகவும், அதேபோன்று ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் இன்ஸ்பெக்டர் கிஷோர் பாட்டீல் தெரிவித்துள்ளார். போலீஸார் இரண்டு பேரையும் கைதுசெய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.