Published:Updated:

‘அவளின் வலி, கதறலை என்னால் தாங்கிக்கொள்ள முடியல’- மனைவியைக் கொன்றுவிட்டு உயிரை மாய்த்த ஐ.டி ஊழியர்

ராம் பிரசாத்

புனேவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர், தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murder
Murder

மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்தவர், கணேஷ். ஐ.டி ஊழியரான இவருக்குத் திருமணமாகி விருஷாலி என்ற மனைவி உள்ளார். கணேஷின் தம்பியின் தொலைபேசிக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. ‘நாங்கள், எங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறோம்’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர், உடனடியாகத் தனது சகோதரரின் தொலைபேசிக்கு அழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் தொலைபேசியை எடுக்காததால் பதறிப்போனவர், அவரது வீட்டுக்கு விரைந்தார். பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, கணேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரது மனைவி, பலத்த காயங்களுடன் அதிக ரத்தம் வெளியேறி, சடலமாகக் கிடந்தார்.

Crime
Crime

இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் சடலத்தையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கணேஷின் சகோதரரிடம் காவல்துறையினர் விசாரித்ததில், அவர்களுக்கு கடன் பிரச்னை எதுவும் இல்லை என்றும், கணேஷின் மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அதற்கான சிகிச்சைகள் எடுத்துவந்தார் என்றும் தெரியவந்துள்ளது. கணேஷ் எழுதிய கடிதம் ஒன்றும் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “இறந்துபோன கணேஷின் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தைக் கைப்பற்றியுள்ளோம். அதில், தனது மனைவியை மிகவும் நேசித்தேன். கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் வலியையும் கதறல்களையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான், அவளை மிகவும் நேசித்தேன்” என்று அதில் எழுதியிருந்தது.

 police
police

மேலும் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், `கணேஷ் தனது மனைவியை சுத்தியால் அடித்துக் கொலைசெய்துவிட்டு, பின்னர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். முழுமையான விசாரணைக்குப் பின்னர் என்ன காரணம் என தெரியவரும்'' என்றனர்.