பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாத இறுதியில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தக் கொலை தொடர்பாக ஏற்கனவே எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலையில் புனேயைச் சேர்ந்த சந்தோஷ் ஜாதவ், `சித்தேஷ் காம்ப்ளே’ என்று அழைக்கப்படும் மஹாகால் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன. இதனால் பஞ்சாப் போலீஸார் விசாரணைக்காக புனே சென்றனர். ஏற்கெனவே ஜாதவுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் காம்ப்ளேயை புனே ரூரல் பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர். அதோடு ஜாதவ் மீதும் புனே ரூரல் போலீஸில் ஐந்து வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவர்மீது மகாராஷ்டிரா ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதோடு புனேயில் பிரபல கிரிமினல் ஓம்கார் பன்காலே என்பவரைக் கொலை செய்த வழக்கிலும் போலீஸார் ஜாதவைத் தேடிவந்தனர்.
அவரைப் பிடிக்க புனே ரூரல் போலீஸார் தனிப்படை அமைத்திருந்தனர். இந்த நிலையில் அவர் குஜராத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீஸார் நேற்று இரவு குஜராத்தில் ரெய்டு நடத்தி ஜாதவைக் கைதுசெய்துள்ளனர். பின்னர் போலீஸார் இரவே நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி, வரும் 20-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டது.
மூஸ் வாலா படுகொலை குறித்து விசாரிக்க ஜாதவை தங்களது காவலில் எடுத்து பஞ்சாப்புக்கு அழைத்து செல்ல பஞ்சாப் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். புனே போலீஸார் மூஸ் வாலா படுகொலை தொடர்பாக நவ்நீத் சூர்யவன்சி என்பவரையும் கைதுசெய்துள்ளனர். இவர் ஜாதவின் கூட்டாளி. இவர்கள் இருக்கும் இடம் குறித்து காம்ப்ளேயிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது என்று புனே போலீஸார் தெரிவித்தனர்.
