Published:Updated:

டேட்டிங் ஆப் மூலம் வலை; 16 பேரிடம் நகை, பணம் திருடிய பெண்! -அதே பாணியில் சிக்கவைத்த போலீஸார்

சாய்லி காலே
சாய்லி காலே

புனேயைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா காலத்தில் வேலை இழந்ததால், டேட்டிங் ஆப்பில் போலித் தகவல்களைப் பதிவேற்றம் செய்து, 16 பேரை வசப்படுத்தி அவர்களிடமிருந்து நகை, பணத்தை அபகரித்துள்ளார். சென்னை வாலிபரிடம் கைவரிசை காட்டியபோது பிடிபட்டுள்ளார்.

கொரோனா காலத்தில் நாட்டில் லட்சக்கணக்கானோர் தங்களது வேலையை இழந்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டனர். வேலையை இழந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த மாற்று வேலையைச் செய்தனர் அல்லது சிறு சிறு வியாபாரத்தைச் செய்தனர். கொரோனாவால் வேலை இழந்தவர்களில் புனேயைச் சேர்ந்த 27 வயது சாய்லி காலேயும் ஒருவர். இவர் வேலை பறிபோன பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினார். பின்னர் டேட்டிங் ஆப் மூலம் பல மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்களை நண்பர்களாக்கினார். பின்னர் அவர்களுடன் அடிக்கடி சாட்டிங் செய்தார். அதோடு விடாமல் நயமாகப் பேசி தனது ஊருக்கு வரும்படி அழைப்பார்.

டேட்டிங் ஆப்
டேட்டிங் ஆப்

காலேயின் வலையில் விழுபவர்கள் அவர் சொல்லும் இடத்துக்கு வருவது வழக்கம். அங்கு சென்றவுடன் காலே நயமாகப் பேசி அவர்களிடமிருக்கும் நகை மற்றும் பணத்தை அபகரித்துக்கொண்டு வந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு தலைமறைவாகிவிடுவார். அவருக்கு சென்னையைச் சேர்ந்த அசிஷ் குமார் என்பவரிடம் அறிமுகம் ஏற்பட்டது. வழக்கம்போல் அசிஷ்குமாரை புனேவுக்கு வரவழைத்தார் காலே. புனே வந்த அசிஷ் குமாரிடம் நயமாகப் பேசி அவரின் நகை மற்றும் பணத்தை அபகரித்தார். காலே புனே வகாட் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் அசிஷ் குமாரை காலே சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது அசிஷ் குமார் குடிக்க காலே குளிர்பானம் கொடுத்தார். அதைக் குடித்த சிறிது நேரத்தில் அசிஷ் குமார் மயங்கிவிட்டார்.

உடனே அவரிடமிருந்த பொருள்களை எடுத்துக்கொண்டு காலே தப்பிவிட்டார். மயக்கம் தெளிந்த அசிஷ் குமார் உடனே அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். பிம்ப்ரி-சிஞ்ச்வாட் போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்திவந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர் போலீஸார். இதன் மூலம் புனே சாது வாஸ்வானி சாலையிலுள்ள வீட்டிலிருந்து காலே பிடிபட்டார். அவரிடம் விசாரித்தபோதுதான் தான் கொரோனா காலத்தில் வேலை இழந்த காரணத்தால் இந்தக் காரியத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். மொத்தம் 16 பேரிடம் இது போன்று நகை மற்றும் பணத்தை அபகரித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை எப்படிப் பிடித்தனர் என்பது குறித்து போலீஸ் கமிஷனர் கிருஷ்ணா பிரகாஷ் கூறுகையில், ``குற்றப்பிரிவு போலீசார் டேட்டிங் ஆப்களான பம்பிள், டின்டர் போன்றவற்றில் பல்வேறு பெயர்களில் போலிக் கணக்குத் திறந்து காலேக்கு நட்பு கோரிக்கை கொடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் காலே அதை ஏற்கவே இல்லை. இதனால் பெண் பெயரில் புதிய கணக்கு திறந்து மீண்டும் நட்பு கோரிக்கை விடப்பட்ட போது அதை காலே ஏற்றுக்கொண்டார். சில நாள்கள் சாட்டிங் செய்தபோது காலே நேரில் பார்க்க அழைப்பு விடுத்தார். உடனே போலீஸார் சுதாரித்துக்கொண்டு அப்பெண் சொன்ன இடத்துக்குச் சென்று கைது செய்தோம். கொரோனாவுக்கு முன்பு டெலிகாம் கம்பெனியில் வேலை பார்த்த காலே கொரோனாவால் வேலை இழந்தார் .

சாய்லி காலே
சாய்லி காலே

வேறு வேலை கிடைக்காததால், இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆண், பெண் பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் தனது வலையில் விழவைத்திருக்கிறார். அவரது வீட்டில் சோதனை நடத்தி 15.25 லட்சம் பணம் மற்றும் 289 கிராம் தங்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காலே பெரும்பாலும் புனேயில் உள்ளவர்களைக் குறிவைப்பது இல்லை. வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து அவர்கள் வலையில் விழுந்த பிறகு அவர்களை புனேவுக்கு வரவழைத்து அவர்களை ஓட்டல் அல்லது லாட்ஜ் அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கச் செய்து அவர்களது பொருள்களை அபகரித்திருக்கிறார்.

பெண்களிடம் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து ஆபாச படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டிப் பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். ஆண் நண்பர்களிடம் எப்போதும் போன் நம்பரை பகிர்ந்துகொள்வது கிடையாது. ஆனால் பெண்களிடம் போன் நம்பரை கொடுத்திருக்கிறார்” என்று கமிஷனர் தெரிவித்தார்.

இந்தப் பெண்ணுக்கு எதிராக இதுவரை நான்கு ஆண்கள் புகார் செய்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை பெண்கள் யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. காலேயின் தாயார் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே, டாக்டர்கள் அவருக்கு தூக்க மாத்திரையைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட காலே அந்த மாத்திரைகளைக்கொண்டு நட்புவலையில் விழுபவர்களை மயககுவதற்குப் பயன்படுத்தியதும் தெரியவந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு