மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர், புனே நகர காவல்துறையிடம் அதிர்ச்சிகரமான புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். அதில்,"எனக்கு 2019-ல் திருமணம் நடந்தது. அப்போது ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள் அடங்கிய வரதட்சணையை என் மாமியார் எங்களிடம் வற்புறுத்திப் பெற்றுக்கொண்டார். திருமணத்துக்குப் பிறகு எனக்குக் குழந்தை பிறக்கவில்லை. அதனால் பல்வேறு சாமியார்களைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்று அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மாமியாரும், அவருடைய குடும்பத்தினரும் வற்புறுத்திவந்தனர். என் கணவரும் இதற்கு உடந்தையாக இருந்தார்.

அதைத் தொடர்ந்து, சமீபத்தில் சடங்கு ஒன்றை நடத்தினார்கள். அதில், மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியிலுள்ள எனக்குத் தெரியாத பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கிருந்த அருவியின் கீழ் `அகோரி’ பயிற்சியில் ஈடுபடக் கட்டாயப்படுத்தி சில மந்திரங்களைக் கூறச் சொன்னார்கள்.
இந்த நடைமுறைகளின்போது, என் கணவரின் குடும்பத்தார் யாரோ ஓர் உள்ளூர் மந்திரவாதியிடம் வீடியோ காலில் தொடர்பில் இருந்தனர். அவரின் அறிவுறுத்தலின்படி, கர்ப்பம் தரிக்க வலுக்கட்டாயமாக என்னைச் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று, இறந்த மனிதனின் எலும்புத்தூளை சாப்பிடக் கட்டாயப்படுத்தினார்கள். இது போன்ற கொடுமைகளை இனியும் அனுபவிக்க முடியாது. எனவே, அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, புனே போலீஸார் புதன்கிழமை கணவர், மாமியார் உட்பட ஏழு பேர்மீது எஃ.ப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். இது குறித்துப் பேசிய காவலதிகாரி சர்மா, `` இந்தச் சம்பவம் நடந்த சுடுகாட்டை நாங்கள் தேடத் தொடங்கியிருக்கிறோம். குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வோம். அதன் பிறகு சம்பவம் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும். மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.