Published:Updated:

ஸ்க்ரு டிரைவர் சித்ரவதை;ஆசிட்; தண்ணீருக்கு பதில் சிறுநீர்-பஞ்சாப் தொழிலாளியை அடித்துக்கொன்ற கும்பல்!

பஞ்சாபில் கூலித்தொழிலாளியை அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் மரத்தில் கட்டிவைத்து தாக்கி சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜக்மாலே சிங், பஞ்சாப் தொழிலாளி
ஜக்மாலே சிங், பஞ்சாப் தொழிலாளி

பஞ்சாப் மாநிலம் சங்காலி வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்மாலே சிங் (வயது 37). இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான இவரை அதே கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் நவம்பர் 7-ம் தேதி கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். ஜக்மாலேவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவோ அவரைக் காப்பாற்றவோ அங்கு யாரும் இல்லை. சுமார் 3 மணி நேரமாக ஜக்மாலேவை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். வலியைத் தாங்காமல் கதறியுள்ளனர். ஆனால், இரக்கமற்ற அந்தக் கும்பல் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். தண்ணீர் வேண்டும் என்று கெஞ்சியபோது சிறுநீரைக் குடிக்கக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

ஸ்க்ரு டிரைவர் சித்ரவதை;ஆசிட்; தண்ணீருக்கு பதில் சிறுநீர்-பஞ்சாப் தொழிலாளியை அடித்துக்கொன்ற கும்பல்!

அதன்பின் ஜக்மாலேவின் வீடு அமைந்துள்ள சாலையில் கிடத்திவிட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் நடந்து மூன்று நாள்கள் வீட்டிலே இருந்துள்ளார், சிகிச்சைக்குப் பணமில்லாத அந்தக் கூலித்தொழிலாளி. ஜக்மாலேவின் உடல்நிலை மோசமானதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஜக்மாலேவின் உடல்நிலை மோசமானதையடுத்து அவரை பாட்டியாலாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அதன்பின் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

`கயிறு எங்கிருந்து கிடைத்தது?' - கேரள மாணவி ஃபாத்திமா தற்கொலையில் தந்தை சந்தேகம்!

நவம்பர் 13-ம் தேதி ஜக்மாலே போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``ரிங்குவின் என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று என்னைக் கடுமையாகத் தாக்கினர். மரத்தில் கட்டிவைத்து சுமார் 3 மணி நேரம் அடித்தனர். ரிங்கு என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். அவரின் தந்தை அமர்ஜீத் சிங் சிறிய உருளையைக் கொண்டு என்னை ஈவு இரக்கமின்றி கடுமையாகத் தாக்கினார்.

நான் ரிங்குவிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். பாத்ரூம் சென்றவர் சிறுநீரைப் பிடித்துவந்து குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். நான் மறுக்கவே என்னை அடித்து துன்புறுத்தி குடிக்க வைத்தனர்” எனக் கூறியிருந்தார்.

கைது
கைது

ஜக்மாலேவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமர்ஜீத் சிங், ரிங்கு, லக்கி, பிந்தேர் ஆகிய நான்குபேரும் நவம்பர் 14-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்துப் பேசிய ஜக்மாலின் மனைவி மன்ஜீத் கவுர், ``என் கணவருக்கும் ரிங்கு மற்றும் அவருடைய நண்பர்களுக்குமிடையே அக்டோபர் 21-ம் தேதி கைகலப்பு ஏற்பட்டது. இந்தப்பிரச்னை அத்துடன் முடிந்தது என நினைத்திருந்தோம். ஆனால் ரிங்கு, பிந்தர், லக்கி மூன்றுபேரும் என் கணவரை அமர்ஜீத் சிங் வீட்டுக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.

``எப்படி வந்ததோ, அப்படியே திரும்பிப்போனது"- குப்பை சேகரிப்பவருக்குக் கிடைத்த லாட்டரியும் பாடமும்!

ஜக்மாலே பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஆதிக்க மனப்பான்மையில் ரிங்கு இவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். ஜம்மாலேவின் சகோதர் குர்ஜீத் சிங்கையும் சில வருடங்களுக்கு முன்பு ரிங்கு தாங்கியுள்ளார். இதில் அவரின் இரண்டு கைகளும் உடைந்துள்ளன. ரிங்கு மற்றும் ஜக்மாலேவின் குடும்பத்துக்கிடையே பகையே இருந்துள்ளது. கைகலப்பை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜக்மாலே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

மரணம்
மரணம்

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த அவரது உறவினர் பேசுகையில், ``அவரை கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கினர். இரும்பு ராடுகள் மற்றும் கட்டைகள் கொண்டு தாக்கியதில் கால்கள் உடைந்துவிட்டன. காயமான பகுதியில் ஸ்க்ரு டிரைவரைக்கொண்டு குத்தி சித்ரவதை செய்தார்கள். வலியால் கதறும்போது காயம்பட்ட இடத்தில் ஆசிட் ஊற்றினார்கள். குடிக்கத் தண்ணீர் வேணும்னு கெஞ்சும்போது சிறுநீரைக் குடிக்கக் கட்டாயப்படுத்தினர். எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை" என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கணவனை இழந்த மன்ஜீத் கவுர் மூன்று குழந்தைகளுடன் அநாதையாக நிற்கிறார். ஜக்மாலே சிங்கின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். பஞ்சாப் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரியம் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஆணையத்தை தலைவர் தேஜிந்தர் கவுர், ``இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. பொருளாதார ரீதியாக அந்தக் குடும்பத்துக்கு தேவையான உதவிகளைச் செய்ய பரிந்துரை செய்துள்ளோம்” என்றார்.

கழுத்தில் இறுக்கப்பட்ட கயிறு; பாலியல் வன்கொடுமை! - பாக்., மாணவிக்கு நேர்ந்த துயரம்