வீட்டுக்குள் பறந்துவந்த புறாவால் பிரச்னை; படுகொலையில் முடிந்த வாக்குவாதம்! - பஞ்சாப் அதிர்ச்சி

பஞ்சாபில், தான் வளர்த்த புறாவைத் திரும்பக் கொடுக்காதவரைச் சரமாரியாகத் தாக்கி படுகொலை செய்தவரை போலீஸார் தேடிவருகிறார்கள்.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள சங்ரூர் மாவட்டத்தின் பூம்ஸி (Bhumsi) பகுதியில் ரன்பீர் சிங் (40) (Ranbir Singh) என்ற விவசாயி குடும்பத்துடன் வசித்துவருகிறார். கடந்த மாதம் குர்பிரீத் சிங் (Gurpreet Singh) என்பவரின் புறா, ரன்பீர் வீட்டுக்குள் பறந்து வந்திருக்கிறது. அந்தப் புறாவைத் திரும்பக் கொடுப்பது தொடர்பாக குர்பிரீத் - ரன்பீர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாகியிருக்கிறது. இந்த முன்விரோதத்தில், குர்பிரீத், ரன்பீர் சிங்கைக் கொலை செய்ததாக அவரின் மனைவி சரண்ஜித் கௌர் (Sharanjit Kaur) போலீஸில் புகாரளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

``கடந்த ஜனவரி 12-ம் தேதி குர்பிரீத் சிங் என்பவரின் புறா எதிர்பாராதவிதமாக ரன்பீர் சிங்கின் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறது. அந்தப் புறாவைத் திரும்பத் தரும்படி குர்பிரீத் கேட்டதற்கு, ரன்பீர் புறாவைத் திரும்பித் தர மறுத்திருக்கிறார். தனது புறாவைத் தர மறுத்ததால், அன்று மாலை குர்பிரீத் சிங் தனக்குத் துணையாகக் கமல் (Kamal), ஜர்னெயில் சிங் (Jarnail Singh) மற்றும் குர்பாக் சிங் (Gurbaksh Singh) ஆகியோரை அழைத்துக்கொண்டு ரன்பீர் வீட்டுக்கு வந்திருக்கிறார். அங்கு அனைவரும் சேர்ந்து ரன்பீரை கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்" என்று அமர்கர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த ஜனவரி 12-ம் தேதி, தனது கணவர் ரன்பீரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, குர்பிரீத் மற்றும் அவரின் கூட்டாளிகள் அவரைத் தாக்கியதாக சரண்ஜித் கௌர் போலீஸ் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். சரண்ஜித்தின் அலறல் சத்தம் கேட்டு, அந்த இடத்திலிருந்து அனைவரும் தப்பித்து ஓடிவிட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, கடந்த ஜனவரி 29-ம் தேதி, ரன்பீர் சிங் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் இருந்தபோது, அன்று மாலை புறா விவகாரத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தைப் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று குர்பிரீத் சிங் அவரை அருகிலுள்ள மைதானத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து, ரன்பீரும், அவர்கள் சொன்ன இடத்துக்குச் சென்றிருக்கிறார். ரன்பீர் சென்ற சிறிது நேரத்தில் தனது கணவரைத் தாக்குவதாக அக்கம் பக்கத்தினர் கூறியதைக் கேட்டு சம்பவ இடத்துக்கு அலறியடித்து விரைந்து சென்றுள்ளார் சரண்ஜித்.
சரண்ஜித் கௌர், அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது குர்பிரீத் சிங் மற்றும் அவரின் கூட்டாளிகள் ரன்பீர் சிங்கை மிகக் கொடூரமாகத் தாக்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள். தலை, கை, கால், உடல் என்று பல இடங்களில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில், ரத்தவெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்திருக்கிறார் ரன்பீர் சிங். சரண்ஜித் கௌர் கூச்சலிடுவதைக் கண்ட அந்தக் கும்பல், அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கிறது.
படுகாயமடைந்த ரன்பீர் சிங்கை அருகிலுள்ள அமர்கர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமடையவே, அங்கிருந்து மலர்கோட்லா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். சிகிச்சை பலனின்றி மலர்கோட்லா மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, ரன்பீர் சிங்கின் மனைவி சரண்ஜித் கௌர், அமர்கர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குர்பிரீத் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் மீது கொலை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தலைமறைவான குர்பிரீத் சிங் உள்ளிட்டோரை போலீஸார் தேடிவருகிறார்கள்.