Published:Updated:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி மோசடி; நிரவ் மோடி நேரில் ஆஜராக மும்பை கோர்ட் உத்தரவு!

 நிரவ் மோடி
நிரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு, 14,000 கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் இருக்கிறார். நிரவ் மோடி கடந்த 2019-ம் ஆண்டு, மார்ச் மாதம் லண்டனில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நிரவ் மோடி லண்டனிலுள்ள மேல் கோர்ட்டில் போராடிக்கொண்டிருக்கிறார்.

 நிரவ் மோடி
நிரவ் மோடி

ஏற்கெனவே ஜாமீன் கேட்டு நிரவ் மோடி தாக்கல் செய்த மனுக்கள் லண்டன் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில் சி.பி.ஐ அவரை இந்தியாவுக்கு நாடு கடந்த நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த மோசடியில் நிரவ் மோடியுடன் இணைந்து செயல்பட்ட மெஹுல் சோக்‌ஷி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலுள்ள ஆண்டிகுவா தீவில் குடியுரிமை எடுத்துக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.

நிரவ் மோடிக்கு இந்தியாவிலுள்ள சொத்துகளைக் கையக்கப்படுத்தும் பணியில் அமலாக்கப் பிரிவும், சி.பி.ஐ-யும் ஈடுபட்டன. நிரவ் மோடியிடமிருந்து கைப்பற்றப்பட்ட கார்கள், விலையுயர்ந்த ஓவியங்கள், ஆடம்பர கைக்கடிகாரங்களை ஏலம் விட்டு பணத்தைத் திரட்டிவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், அலிபாக்கில் உள்ள நிரவ் மோடியின் பங்களா ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடியின் சகோதரி புர்வி மேத்தா கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அப்ரூவராக மாறிவிட்டார். இந்தநிலையில் இவர்களின் வழக்கு மும்பையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி வி.சி.பார்டே இதை விசாரித்தார். இதில் நிரவ் மோடி மற்றும் புர்வி மேத்தா ஆகிய இருவரும் ஜூன் 11-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். நேரில் ஆஜராகாவிட்டால் பொருளாதார குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அதோடு நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி புர்வியின் சொத்துகள், கம்பெனி சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்று கேட்டு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நிரவ் மோடியின் மனைவி அமி மற்றும் மைத்துனர் மைனிக் மேத்தாவுகும் இந்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் அமலாக்கப் பிரிவு கேட்டுக்கொண்டதற்கிணங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் நிரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. நிரவ் மோடி மோசடி செய்த பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாராக்கடன் அதிகரித்து நஷ்டமடையத் தொடங்கியது. இன்னும் அந்த நஷ்டத்திலிருந்து வங்கி மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு