Published:Updated:

திருச்சி: `எங்களை எதிர்த்துக்கிட்டு இருந்துருவியா?’ - வழக்கறிஞரை மிரட்டிய புதிய தமிழகம் நிர்வாகிகள்

புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள்
புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள்

அமர்நாத்தின் தந்தை முத்தையன், லால்குடி காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். முத்தையன் புகாரின் அடிப்படையில் லால்குடி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

``எங்க தலைவர் இட ஒதுக்கீட்டுக்காக உயிரைக்கொடுத்துப் போராடிக்கிட்டு இருக்காரு. நீ என்னான்னா, திரும்பவும் பட்டியல் இனத்திலேயே இருக்கணும்னு மனுப்போடுறியா... எங்களை எதுத்துக்கிட்டு இங்க இருக்க முடியாது" என்று புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், வழக்கறிஞர் ஒருவரை வீடு தேடிச் சென்று மிரட்டிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், உயிருக்கு பயந்து அந்த வழக்கறிஞர் குடும்பமே தலைமறைவாக வாழ்ந்துவருகிறது என்கிறார்கள்.

அமர்நாத்தின் தந்தையை மிரட்டிய புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள்
அமர்நாத்தின் தந்தையை மிரட்டிய புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள்

தென்மாவட்டங்களில் வசிக்கும் பள்ளன், குடும்பன், காலாடி, உள்ளிட்ட பிரிவுகளை ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர்மாற்றம் செய்து, அந்தப் பிரிவுகளைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் (எஸ்.சி) இருந்து பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு (பிசி) மாற்ற வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் தென்மாவட்டங்களில் நடந்துவருகின்றன. இதைப் பரிசீலிப்பதற்காக, தமிழக அரசு மார்ச் 2019-ல், ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இந்தநிலையில் திருச்சி லால்குடியைச் சேர்ந்த அமர்நாத் என்பவர், ``தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான முழு அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே இருக்கிறது. அதனால் ஹன்ஸ்ராஜ் வர்மா குழு போன்ற குழுவை அமைப்பதற்கான அதிகாரமும் மத்திய அரசிடம் மட்டுமே இருக்கிறது. தமிழக அரசு அமைத்த இந்தக் குழுவை ரத்து செய்ய வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த மாதம் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்.

புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள்
புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள்

இந்த மனு நீதியரசர் கிருபாகரன் தலைமையிலான அமர்வின் முன்பு கடந்த சில நாள்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான விவரங்களைத் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டு, வழக்கை வரும் 13-ம் தேதி வரை அமர்வு ஒத்திவைத்தது.

இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் ஐயப்பன், சிவசங்கர், பாலு, தினகரன் மற்றும் அரசக்குமார் ஆகியோர் அமர்நாத்தின் வீட்டுக்கு வந்து. `எங்க தலைவர் இட ஒதுக்கீட்டுக்காக உயிரைக் கொடுத்துப் போராடிக்கிட்டு இருக்காரு. நீ என்னான்னா, திரும்பவும் பட்டியல் இனத்துலேயே இருக்கணும்னு மனுப்போடுறியா... எங்களை எதுத்துக்கிட்டு இங்க இருக்க முடியாது" என்று மிரட்டியிருக்கிறார்கள்.

அமர்நாத் வீட்டிலிருந்த அவருடைய தந்தையைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, குடும்பத்தை வீட்டுக்குள் வைத்துக் கொளுத்திவிடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

அதோடு, அமர்நாத்தின் செல்போன் நம்பரை `துரோகி’ என்று தலைப்பிட்டு வாட்ஸ்அப் குழுக்களில் செய்தியைப் பரப்பி, அவருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவருகின்றனர். இதனால் அமர்நாத் உயிருக்கு பயந்து செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாக இருந்துவருகிறார். இந்தநிலையில் அமர்நாத்தின் தந்தை முத்தையன் லால்குடி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். முத்தையன் புகாரின் அடிப்படையில் லால்குடி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு