ராமேஸ்வரம் அருகே புதுரோடு பகுதியில் இலங்கையைச் சேர்ந்த நபர் தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கியூ பிரிவு போலீஸார் அங்கு மறைந்திருந்த இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த கீர்த்திகன் என்பவரையும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த முத்துக்குமரன் என்பவரையும் கைதுசெய்து கியூ பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

அதில், இலங்கையைச் சேர்ந்த கீர்த்திகன் கடந்த 2020-ம் ஆண்டு போலியாக இந்திய ஆதார் கார்டு, பாஸ்போர்ட் தயார் செய்து லண்டன் செல்வதற்காக வங்கதேசத்துக்குச் சென்று அங்கிருந்து லண்டன் செல்ல முற்பட்டபோது வங்கதேச போலீஸாரால் சிறைப்பிடிக்கப்பட்டு 7 மாதங்கள் சிறையில் இருந்தது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிறையிலிருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட அவர் வங்கதேசத்திலிருந்து மீண்டும் இந்தியா வந்திருக்கிறார். அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் விமானம் மூலம் இலங்கைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ராமேஸ்வரத்திலிருந்து கள்ளப்படகில் கடல் மார்க்கமாக இலங்கை செல்ல திட்டமிட்டிருக்கிறார். இதற்காக சென்னையிலிருந்து ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்த கீர்த்திகனுக்கு, முத்துக்குமரனின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

முத்துக்குமரன் ரூ.30,000 வாங்கிக்கொண்டு கீர்த்திகனை இலங்கைக்கு கள்ளத்தனமாக அனுப்புவதற்கு ஏற்பாடுகளை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கீர்த்திகன் போலி பாஸ்போர்ட் மூலம் எதற்காக லண்டன் செல்ல முயன்றார்? தற்போது மீண்டும் இலங்கைக்குச் செல்வதற்கான காரணம் என்ன... வேறு ஏதேனும் கடத்தல் தொடர்பான சம்பவங்களில் இவருக்குத் தொடர்பிருக்கிறதா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.