Published:Updated:

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 170 கிலோ கஞ்சா! - மாறுவேடத்தில் மடக்கிப்பிடித்த க்யூ பிரிவு போலீஸார்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பார்சல்கள்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பார்சல்கள்

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தவிருப்பதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 170 கிலோ கஞ்சா பார்சல்களை மாறுவேடத்தில் சென்ற க்யூ பிரிவு போலீஸார், நடுக்கடலில் வைத்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேரை கைதுசெய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

போலீஸார் பறிமுதல் செய்த கஞ்சா பார்சல்கள்
போலீஸார் பறிமுதல் செய்த கஞ்சா பார்சல்கள்

தமிழகக் கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் விரலி மஞ்சள் ஆகியவற்றைக் கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. இவற்றுக்கு மாற்றாக இலங்கையைச் சேர்ந்த கடத்தல் நபர்கள் தங்கக்கட்டிகளை கொடுப்பதால், இந்தச் சட்டவிரோதச் செயலில் பலரும் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கைக்குக் கடத்திச் செல்வதற்காக ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கஞ்சாவைக் கடத்திவருவதும், அவ்வப்போது அவை போலீஸாரிடம் சிக்குவதும் வழக்கமாக நடந்துவருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மதுரையில், கேரளாவிலிருந்து கடத்திவரப்பட்ட 225 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதேபோல் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2.3 டன் விரலி மஞ்சள் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சிக்கியது.

ராமநாதபுரம்: கடற்கரைப் பகுதியில் சிக்கிய 2.3 டன் மஞ்சள்! - இலங்கைக்குக் கடத்த முயன்ற இருவர் கைது

இந்தநிலையில், தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கஞ்சா கடத்தப்படவிருப்பதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநாதபுரம் க்யூ பிரிவு ஆய்வாளர் மகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் முஸ்தபா, தலைமைக் காவலர்கள் நாராயணன், சுந்தரமூர்த்தி, சதீஷ் ஆகியோர் தஞ்சாவூர் க்யூ பிரிவு ஆய்வாளர் பிரபாகரனுடன் இணைந்து மல்லிப்பட்டினம் அருகேயுள்ள வெளிவயல் கடற்கரையில் மாறுவேடங்களில் மறைந்திருந்து கண்காணித்தனர்.

கஞ்சா கடத்தலில் கைதானவர்கள்
கஞ்சா கடத்தலில் கைதானவர்கள்
விகடன்

அப்போது, கரையிலிருந்து சுமார் 6 கடல் மைல் தொலைவில் ஃபைபர் படகில் கஞ்சா பார்சல்கள் எடுத்துச் செல்வதை அறிந்தனர். இதையடுத்து, மீனவர்கள்போல் மாற்று உடை அணிந்து படகில் சென்ற க்யூ பிரிவு போலீஸார், இலங்கையிலிருந்து வரும் படகுக்கு கஞ்சா பார்சல்களை மாற்றிவிடக் காத்திருந்த ஃபைபர் படகை மடக்கினர். அந்தப் படகைச் சோதனையிட்டபோது அதில் 170 கிலோ கஞ்சா சிக்கியது.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பார்சல்கள்.
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பார்சல்கள்.

இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸார், ஃபைபர் படகிலிருந்த தஞ்சை கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குமார், ஜெகதீஸ்வரன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் புதுக்குடியைச் சேர்ந்த கந்தன் ஆகியோரைக் கைதுசெய்தனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரத்துக்கு அழைத்துவரப்பட்ட கடத்தல்காரர்களை க்யூ பிரிவு போலீஸார் விசாரணைக்கு பின்னர், சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு