Published:Updated:

ராஹத் டிராவல்ஸ்: உயிரிழந்த தொழிலதிபர்; பணம் தர மறுக்கும் குடும்பம்?! - அதிர்ச்சியில் பங்குதாரர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேருந்து நிறுவன உரிமையாளர் கமாலுதீன்
பேருந்து நிறுவன உரிமையாளர் கமாலுதீன் ( ம.அரவிந்த் )

140 பேருந்துகளில் 100 பேருந்துகளுக்கு மேல் வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார். நாங்கள் கொடுத்த பணத்தைப் பேருந்தில் முதலீடு செய்யாமல் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார். நாங்கள் பணம் கேட்டுப் போராடிவருகிறோம்.

தஞ்சாவூரில் தொழிலதிபர் ஒருவர் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டு `ராஹத்’ என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கி, பேருந்துகளை இயக்கிவந்தார். அவர் திடீரென இறந்துவிட்ட நிலையில், அவரின் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருந்தவர்கள் தங்கள் பணத்தை அவரின் குடும்பத்தினரிடம் கேட்டுவருகின்றனர். மேலும், அந்தத் தொழிலதிபர் தங்களை மோசடி செய்திருப்பதாகவும், குடும்பத்தினர் ஏமாற்ற நினைப்பதாகவும் பணம் திருப்பிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து போராடிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள்
பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள்

தஞ்சாவூர் ரஹ்மான் நகரில் வசித்துவந்தவர் கமாலுதீன். இவருடைய மனைவி ரேஹானா பேகம். இவர்களுக்கு அப்சல் ரஹ்மான், ஹாரிஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த இருபது வருடங்களாக டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்திவந்த கமாலுதீன் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கி, நல்ல முறையில் செயல்படுத்திவந்தார். இதற்காக தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்துவந்த இஸ்லாமியர்களிடம் அவர்களின் விருப்பத்துக்கேற்ப பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டு டிராவல்ஸ் நடத்திவந்ததுடன், பங்குதாரர்களின் முதலீட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் லாபப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவந்தார்.

இந்நிலையில் கொரோனா முதல் அலை பாதிப்புக்குப் பிறகு அவரால் பங்குதாரர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. நிலமையைப் புரிந்துகொண்ட பங்குதாரர்களும் ஒரு வருடம் வரை பணம் கேட்காமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் கமாலுதீனிடம் பல பங்குதாரர்கள் தங்கள் முதலீட்டுப் பணத்தைக் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாகவே கடும் மன உளைச்சலில் தவித்த அவர், உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி உயிரிழந்தார்.

மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளிக்கும் பங்குதாரர்கள்
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் பங்குதாரர்கள்

இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட காரியங்கள் முடிந்த பிறகு பங்குதாரர்கள் பலர் எங்களுக்கு லாபப் பணம் வேண்டாம் முதலீடு செய்த பணத்தை மட்டும் திருப்பிக் கொடுங்கள் என்று கமாலுதீனின் குடும்பத்தினரிடம் கேட்டதற்கு, அவர்கள் முறையான பதிலை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், தங்கள் பணத்தை மீட்டுத் தரும்படி முதலமைச்சர் தனிப் பிரிவு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி ரவளி பிரியா ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர். ராஹத் நிறுவனத்தில் சுமார் 12,000 பங்குதாரர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கமாலுதீன் மோசடி செய்திருப்பதாகக் கூறி, தங்கள் பணத்தைக் கேட்டுப் பலரும் போராடிவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சையது அமீருதீன் என்பவரிடம் பேசினோம். ``கமாலுதீன் ஒரு பேருந்துக்கு 16 பேர் வீதம் பங்குதாரர்களைச் சேர்த்துக்கொண்டு பேருந்தின் ரிஜிஸ்டர் எண்ணைக் குறிப்பிட்டு எந்தப் பேருந்தில் யாரெல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள் எனப் பத்திரம் கொடுத்து பேருந்துகளை வாங்கிச் செயல்படுத்திவந்தார். பேருந்தின் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் போக மீதி உள்ள லாபத்தை ஒவ்வொரு மாதமும் பங்குதாரர்களுக்குக் கொடுத்துவந்தார். இதைச் சரியாகச் செய்து வந்ததால் பெரும் நம்பிக்கை ஏற்பட்ட இஸ்லாமியர்கள் பலரும் அவருடைய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ரூ. 1 லட்சம் முதல் 5 லட்சம் வரையும் பலர் கூடுதலாகவும் முதலீடு செய்துள்ளனர்.

உயிரிழந்த கமாலுதீன்
உயிரிழந்த கமாலுதீன்

ஒருகட்டத்தில் பெரும் வளர்ச்சியடைந்த ராஹத் நிறுவனத்தில், தற்போது 140 பேருந்துகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மொத்தம் 12,000 பங்குதாரர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் தொடங்கிய பிறகு பங்குதாரர்களுக்கு லாபப் பணம் கொடுக்க முடியவில்லை. ஒரு வருடம் வரை யாரும் பணம் கேட்கவில்லை. அதன் பிறகும் கமாலுதீன் பணம் தராமல் இருந்தார். இதனால் பங்குதாரகள் பலரும் தங்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டோம். அவரும் தருவதாகக் கூறிவந்தார். இந்த நிலையில் திடீரென அவர் இறந்துவிட்டார்.

இதையடுத்து அவரது குடும்பத்தாரிடம் பணம் கேட்டதற்கு எங்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. யாரிடம் கொடுத்தீர்களோ அவர்களிடமே போய்க் கேளுங்கள் என்று பதில் கூறினர். இதைத் தொடர்ந்து பேருந்துகளின் ரிஜிஸ்டர் நம்பரை வைத்து ஒரு பேருந்துக்கு எத்தனைப் பங்குதாரர்கள் இருக்கிறார்கள் எனக் கணக்கெடுத்தோம். ஒரு பேருந்துக்கு 16 பேர் என்பதுதான் எங்களிடம் அவர் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஒரு பேருந்துக்கு 100 பேர் வரை பங்குதாரர்களாக சேர்த்து மோசடி செய்திருப்பதுடன், யாருக்கும் இது தெரியாமல் மறைத்து மோசடி செய்திருக்கிறார் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தோம்.

பங்குதாரர்கள்
பங்குதாரர்கள்

மேலும் 140 பேருந்துகளில் 100 பேருந்துகளுக்கு மேல் வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார். நாங்கள் கொடுத்த பணத்தைப் பேருந்தில் முதலீடு செய்யாமல் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார். மேலும் சிபிஎஸ்இ பள்ளி, பண்ணை வீடு, பிரின்டிங் ஃபிளெக்ஸ், ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட பல தொழிகளில் முதலீடு செய்திருக்கிறார். தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள், சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.

நாங்கள் பணம் கேட்டு அலைந்துகொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 2,000 பேர் ஒன்றாகச் சேர்ந்து `ராஹத் பங்குதாரர்கள் குரூப்’ என்ற ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் பல்வேறு புள்ளிவிவரங்களை எடுத்துள்ளோம். இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாங்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து பங்குப் பணத்தைப் பெற போராடிவருகிறோம்” எனத் தெரிவித்தார்.

வேறு சிலரோ, ``கும்பகோணத்தில் தங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தினால் இரட்டிப்பாகப் பணம் தருவதாகக் கூறி ரூ. 600 கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இந்தச் சம்பவம் கமாலுதீனிடம் முதலீடு செய்தவர்களிடமும் அச்சத்தை வரவழைத்தது. அதற்கேற்றாற்போல் அவரும் பணம் தர முடியாமல் சிக்கிக்கொண்டார். இந்த நிலையில் பணம் கேட்டுப் பலரும் நெருக்க, `நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன். ஒரே நேரத்தில் எல்லோரும் பணம் திருப்பிக் கேட்டால் என்னால் எப்படித் தர முடியும்... குறிப்பிட்ட கால அவகாசம் கொடுங்கள். நிலைமை சீரான பிறகு பணத்தைக் கொடுக்கிறேன்’ என உறுதி கூறியதாகச் சொல்லப்படுகிறது.

ராஹத் நிறுவன உரிமையாளர் கமாலுதீன்
ராஹத் நிறுவன உரிமையாளர் கமாலுதீன்

நிலைமை எல்லை மீறிப்போக கமாலுதீனுக்கு நெருக்கமான சிலர், `நீங்க எதுவும் குழப்பிக்காதீங்க. மஞ்சள் நோட்டீஸ் விட்டு நாம சிக்கலிலிருந்து எளிதாக மீண்டுவிடலாம்’ என யோசனை கூற உடனே பதறியவர், `நம்மை நம்பி முதலீடு செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பி தரணும். ஓடி ஒளியக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறாராம். மருத்துவமனையில் இருந்தபோதும் நம்மகிட்ட உள்ள சொத்துகளை விற்று எல்லோருக்கும் பணம் கொடுத்துடணும் எனவும் அவர் கூறியதாகவும் பேசப்படுகிற நிலையில், அவரது குடும்பத்தார் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது தெரியவில்லை’’ எனப் புலம்பினர்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ்  வழக்கு; லஞ்சம் பெற்றதாக போலீஸாரையும் விசாரிக்க முடிவு?!

கமாலுதீன் தரப்பில் பேசுவதற்குப் பல வகையில் முயன்றோம். அவரின் மகனுக்கும் போன் செய்தோம். ஆனால் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளித்தால், அதை உரிய பரிசீலனைக்குப் பின் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்.

கமாலுதீனுக்கு நெருக்கமாக இருந்த சிலர், ``கொரோனா அலை தொடங்குவதற்கு முன்பு வரை எந்தப் பிரச்னையும் இல்லை. போக்குவரத்து முடங்கிய பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அவர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை. ராஹத் நிறுவனத்தின் மூலமே கமாலுதீன் குடும்பம் வளர்ந்திருக்கிறது. அப்படியிருக்கையில் அவர்களிடம் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன் எனப் புரியவில்லை. இதில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதி கூறியிருக்கிறார்’’ என்று தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு