Published:Updated:

கரூர்: டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்சம், பரிசுப்பொருள்?! - அதிரடிகாட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரனிடமிருந்து ரூ.12,000, டிரைவர் சபரிநாதனிடமிருந்து ரூ.25,000, மேற்பார்வையாளர் ராமலிங்கத்திடமிருந்து ரூ.25,000 என மொத்தம் ரூ.62,000 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்படதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூர், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.62,000 பணம் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் மாவட்டத்திலேயே லஞ்சம் தலைவிரித்தாடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கரூர்
கரூர்
கரூர்: வெளிப்பார்வைக்கு பன்றிப் பண்ணை; உள்ளே லிட்டர் லிட்டராக கள்ளச்சாராயம் - அதிரடி காட்டிய போலீஸ்

கரூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக அலுவலகத்தில், கரூர் மாவட்டத்திலுள்ள அரசு மதுபான கடைகளுக்குக் கொண்டு செல்லும் மதுபாட்டில் குடோனும், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகமும் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையில், தீபாவளி நெருங்குவதை ஒட்டி அரசு அலுவலகங்களுக்கு பரிசுப்பொருள்களும், லஞ்சப்பணமும் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், நேற்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நடராஜன், ஆய்வாளர் சாமிநாதன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்திலிருந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அந்த அலுவலகத்திலுள்ள பகுதிகளில் சோதனையிலும் ஈடுபட்டனர்.

லஞ்ச ஒழிப்பு அலுவலகம்
லஞ்ச ஒழிப்பு அலுவலகம்

அப்போது, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரனிடமிருந்து ரூ.12,000, டிரைவர் சபரிநாதனிடமிருந்து ரூ.25,000, மேற்பார்வையாளர் ராமலிங்கத்திடமிருந்து ரூ.25,000 என மொத்தம் ரூ.62,000 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மது மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி மாவட்டத்திலேயே டாஸ்மாக் சம்பந்தப்பட்ட இடத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீபாவளியையொட்டி நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையால், முக்கிய அரசு அலுவலர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு