Published:Updated:

ராஜபாளையம்: தவறான சிகிச்சைக்கு சிறுவன் பலி - போலி பெண் மருத்துவர் கைது

போலி மருத்துவர்

சிகிச்சை பெற்று வீட்டுக்குச் சென்ற சிறுவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அதிக வியர்வை வெளியேறியிருக்கிறது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர், சிறுவனை மீண்டும் மருத்துவரிடம் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றனர்.

ராஜபாளையம்: தவறான சிகிச்சைக்கு சிறுவன் பலி - போலி பெண் மருத்துவர் கைது

சிகிச்சை பெற்று வீட்டுக்குச் சென்ற சிறுவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அதிக வியர்வை வெளியேறியிருக்கிறது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர், சிறுவனை மீண்டும் மருத்துவரிடம் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றனர்.

Published:Updated:
போலி மருத்துவர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். கூலி வேலை செய்துவருகிறார். இவரின் மகன் கவி தேவநாதன் (வயது 6). சிறுவன் கவி தேவநாதனுக்குக் கடந்த இரண்டு தினங்களாக காய்ச்சல் இருந்திருக்கிறது. இதனால் சிறுவனை, ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் கிளினிக் நடத்திவரும் அரசு மருத்துவர் பாஸ்கரனிடம் சிகிச்சைக்காக மகேஸ்வரன் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு, சிறுவன் கவி தேவநாதனுக்குக் காய்ச்சல் குணமடைய ஊசி போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். வீட்டுக்குச் சென்றதும் சிறுவன் கவி தேவநாதனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அதிக வியர்வை வெளியேறியிருக்கிறது. இதனால் பதறிப்போன மகேஸ்வரனும் குடும்பத்தினரும் சிறுவனை மீண்டும் மருத்துவர் பாஸ்கரனிடம் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர், உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்திருக்கிறார்.

ஆய்வு
ஆய்வு

இதையடுத்து கவி தேவநாதனை, ராஜபாளையம் - தென்காசி சாலையிலுள்ள அரசுப் பொது மருத்துவமனைக்கு அவரின் தந்தை மகேஸ்வரன் அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் கதறி அழுத மகேஸ்வரன், ``தன் மகன் இறப்புக்கு மருத்துவர் அளித்த தவறான சிகிச்சைதான் காரணம். எனவே, வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும்” என ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் சிறுவன் கவி தேவநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த விவகாரம் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறையிலும் பெரும் புயலைக் கிளப்பியது. எனவே, சிறுவன் இறந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்துறை இணை இயக்குநர் டாக்டர்.முருகவேல், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கலு சிவலிங்கம், நகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா உள்ளிட்ட அதிகாரிகள் மகேஸ்வரன் வீட்டில் ஆய்வு நடத்தினர். மேலும், சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் இந்த விசாரணையில் அரசு மருத்துவர் பாஸ்கரனிடம், சிறுவனுக்கு சிகிச்சை பெறுவதற்கு முன்னர், வீட்டருகே உள்ள பெண் மருந்தாளுநர் ஆக்னெஸ்ட் கேத்ரின் என்பவரிடம் கவி தேவநாதனுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பெண் மருந்தாளுநர் ஆக்னெஸ்ட் கேத்ரின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மருந்துகள்
மருந்துகள்

இந்த விசாரணையில் மருந்தாளுநர் ஆக்னெஸ்ட் கேத்ரின் என்பவர் முறையான மருத்துவப் படிப்பு, அங்கீகாரம், சான்றிதழ் என எதுவும் இன்றி பல வருடங்களாக அந்தப் பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்தது. இது குறித்து, இணை இயக்குநர் முருகவேல் அளித்த புகாரின்பேரில் போலி பெண் மருத்துவர் ஆக்னெஸ்ட் கேத்ரின் கைதுசெய்யப்பட்டார். மேலும், அவரின் வீட்டிலிருந்து ஏராளமான ஆங்கில மருந்து மாத்திரைகள், சத்து டானிக்குகள், வலி நிவாரணிகள், இருமல் மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள், இன்சுலின், ஸ்டீராய்டு மருந்துகள், பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத ஊசிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மருந்துகளின் தரம், காலாவதியாகும் தேதி உள்ளிட்டவை குறித்து மருந்துகள் ஆய்வாளர் பால்ராஜா ஆய்வு நடத்தினார்.

கைது
கைது

இந்த நிலையில், உடற்கூறாய்வு முடிவு வந்த பின்னரே சிறுவனின் இறப்புக்கான உண்மையான காரணம் குறித்துத் தெரியவரும் என மருத்துவக்குழுவினர் கூறினர். மேலும், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்குத் தனக்குத் தானே மருந்துகள் எடுக்கவேண்டாம். அதேசமயம், போலி மருத்துவர்களை அணுகாமல், அருகேயுள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.