ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் ஊரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். வேன் ஓட்டுநராக உள்ளார். அப்பகுதியில் உள்ள இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து முனீஸ்வரனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவருடைய பெற்றோர், பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை முனீஸ்வரனுக்கு பேசி முடித்தனர். இந்த தகவல் முனீஸ்வரன் காதலி மகேஸ்வரிக்கு தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் மன விரக்தியடைந்த மகேஸ்வரி, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வீட்டருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக கீழராஜகுலராமன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதேசமயத்தில், மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட தகவல் சற்று தாமதமாக முனீஸ்வரனுக்கு தெரியவரவும் விரக்தியின் உச்சிக்கே சென்று அழுது புரண்டுள்ளார்.

இதையடுத்து யாரிடமும் பேசாமல் இருந்து வந்த அவர் திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதனால் பதறிப்போன அவரின் உறவினர்கள் முனீஸ்வரனை பல இடங்களிலும் தேடினர். இந்நிலையில் வீட்டருகே இருந்த பழைய கட்டடம் ஒன்றில் உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் முனீஸ்வரன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக முனீஸ்வரனை மீட்டு ராஜபாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பேரில் காப்பாற்றப்பட்டு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் குறித்து ராஜகுலராமன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜபாளையம் அருகே காதலி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.