ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில், பக்கத்து ஊரிலிருந்து சிறுமியைப் பார்க்கவந்த இளைஞனை ஒரு கும்பல் மரத்தில் கட்டிவைத்துத் தாக்கி, வாயில் சிறுநீர் கழித்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, தற்போது இந்தச் சம்பவத்தில் ஆறு பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பு தெரிவித்த தகவலின்படி, பாதிக்கப்பட்ட இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பக்கத்து ஊரில் சிறுமியைச் சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சிறுமியின் குடும்பத்தினர், கிராமவாசிகள் சிலர் அந்த இளைஞனை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கியிருக்கின்றனர்.
இந்த விஷயமறிந்த இளைஞனின் குடும்பத்தினர், சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து அந்த இளைஞனை விட்டுவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இளைஞனைத் தாக்கிக்கொண்டிருந்த கும்பல், அவரை விடுவதற்கு முன்பு அவரின் வாயில் சிறுநீர் கழித்தது. அடுத்தநாள் இது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இது குறித்துப் பேசிய ஜலோர் பகுதி எஸ்.பி ஹர்ஷ்வர்தன் அகர்வாலா, ``இந்தச் சம்பவத்தின் வீடியோ திங்களன்று வைரலானது. புகாரளிக்க யாரும் முன்வரவில்லை என்றாலும்கூட, பாதிக்கப்பட்டவரை நாங்கள் அடையாளம் கண்டு, அவரைத் தொடர்புகொண்டு அவரிடமிருந்து புகார் பெற்று எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட சிறுமி, தன்னைப் பார்க்க வந்த இளைஞன்மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் புகாரளித்திருக்கிறார். சிறுமியிடமிருந்து வாக்குமூலம் பெற்ற பிறகு, இதில் விசாரணை தொடங்கப்படும்" என்றார்.