Published:Updated:

ராஜஸ்தான்: நிலத்தகராறில் கோவில் பூசாரி உயிருடன் எரித்து கொலை! - நடந்தது என்ன?

தீ
தீ ( representational image )

ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் நிலப் பிரச்னை காரணமாக கோவில் பூசாரி ஒருவரை உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலி மாவட்டத்திலுள்ள புக்னா கிராமத்தில் பாபுலால் வைஷ்ணவ் என்ற கோவில் பூசாரி ஒருவருக்கு அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான 5.2 ஏக்கர் நிலம் வருமான ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கோயிலை நிர்வகிக்கும் பூசாரியின் வருவாயை உறுதி செய்ய இதுபோன்ற நிலங்கள் அவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். கோயிலை நிர்வகிக்கும் வரை அந்த நிலம் பூசாரிகளிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற ஒரு நிலத்தை புக்னா கிராமத்தில் வைத்திருந்த பூசாரி பாபு லால் வைஷ்ணவ், அந்த நிலப்பகுதிக்கு அருகே தனக்கென ஒரு வீடு கட்டிக் கொள்ள திட்டமிட்டு இயந்திரங்களை கொண்டு நிலத்தை சமன் செய்துள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சில நபர்கள், அந்த நிலம் தங்களுடையது என்று கூறி பிரச்னை செய்துள்ளனர். இந்த விவகாரம் ஊர் முக்கியஸ்தர்களின் பேச்சுவார்த்தையில், பூசாரி பாபு லால் வைஷ்ணவிற்கு ஆதரவாக பிரச்னை பேசி முடிக்கப்பட்டது.

கொலை
கொலை
Representational Image

இதையடுத்து, அந்த நிலத்தில் தினை விதைத்து அறுவடைக்குத் தயாரானார் பாபு லால். ஆனால், வியாழக்கிழமை காலை குற்றம் சாட்டப்பட்ட கைலாஷ் என்பவர் நண்பர்கள் சிலருடன் வந்து நிலத்தில் தகரக் கொட்டகைகளை போடத் தொடங்கினார். அதை பாபு லால் வைஷ்ணவ் எதிர்த்தபோது மோதல் ஏற்பட்டதில், ​​அவர்கள் பாபு லால் வைஷ்ணவ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பூசாரி பாபு லால் வைஷ்ணவ். இறப்பதற்கு முன்பு பூசாரி பாபு லால், காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், "சுமார் ஆறு பேர் கொண்ட கும்பல், எனது நிலத்தில் விளைவித்திருந்த தினை மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததோடு, என் மீதும் பெட்ரோல் ஊற்றி எரித்தனர்” என்றார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களின் பெயர்களையும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

ராஜஸ்தான்: நிலத்தகராறில் கோவில் பூசாரி உயிருடன் எரித்து கொலை! - நடந்தது என்ன?

இச்சம்பவம் குறித்து, எஸ்.பி. தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கபட்டு, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான பணியை ராஜஸ்தான் போலீஸ் தொடங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து, மூத்த காவல்துறை அதிகாரி ஹார்சி லால் யாதவ், "பூசாரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பூசாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைலாஷ் மீனா, சங்கர், நமோ மீனா உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது: என தெரிவித்தார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, "கரௌலி மாவட்டத்தின் சபோத்ராவில் பூசாரி ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைப் பார்க்கும்போது, ​​பட்டியலினத்தவர்கள், பெண்கள், வர்த்தகர்கள், குழந்தைகள் என யாரும் பாதுகாப்பாக இல்லை என்பது தெளிவாகிறது. மாநில அரசு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்" என்று மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அசோக் கெலாட் அரசை தாக்கி கடுமையாக பேசியுள்ளார்.

வசுந்தரா ராஜே
வசுந்தரா ராஜே

இதுகுறித்து பேசிய, ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா, "ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சட்டத்தை கண்டு அஞ்ச மறுக்கின்றனர்” என்றார். இச்சம்பவம் தொடர்பாக பேசிய பா.ஜ.க எம்.பி. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், "ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள், குழந்தைகள், கோவில் பூசாரிகள் என யாரும் பாதுகாப்பாக இல்லை. பா.ஜ.க ஆளும் மாநிலத்திற்கு `அரசியல் சுற்றுலா’ செல்லும் ராகுல் காந்தி, சுற்றுலா செல்வதற்கு பதிலாக காங்கிரஸ் ஆளும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார். மேலும், தேசிய குற்ற பதிவு பணியகத்தின் தரவுகளின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பொருத்தவரை ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அரசியல் சுற்றுலாவில் ஈடுபடும் ராகுல் காந்தியை ராஜஸ்தான் மீது கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

`ராகுல், பிரியங்கா ஹத்ராஸ் பயணம்; 5 பேருக்கு அனுமதி!'- போலீஸ் குவிப்பு... பரபரப்பான உ.பி எல்லை
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் ராகுல் காந்தியை அரசியல் சுற்றுப்பயணங்களுக்கு செல்வதற்கு பதிலாக இந்த விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும், "அவர் ராஜஸ்தான் அரசாங்கத்தை ராஜினாமா செய்யுமாறு கேட்க வேண்டும் அல்லது அதன் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு