Published:Updated:

`இனப்பெருக்கத்துக்கு வந்த பறவைகள் அவை!' -ராமநாதபுரம் வனத்துறையைப் பதறவைத்த 5 பேர்

கடந்த 4 ஆண்டுகளுக்குப்பின் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. பறவைகள் சரணாலயப் பகுதிகளும் பசுமை மிகுந்து காணப்படுகின்றன.

ராமநாதபுரம் வந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்
ராமநாதபுரம் வந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்

இனப்பெருக்கத்துக்காக வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த அரியவகை பறவைகளை வேட்டையாடியவர்கள், வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்த நீலச்சிறவி பறவைகள் மீட்கப்பட்டு சரணாலயத்தில் விடப்பட்டன.

வனத்துறையினர் மீட்ட நீலச்சிறவி பறவைகள்
வனத்துறையினர் மீட்ட நீலச்சிறவி பறவைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடி, தேர்தங்கல், கீழச்செல்வனூர், சக்கரைகோட்டை கண்மாய் உள்ளிட்ட 6 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. பருவகாலங்களின்போது வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்கு வந்து செல்வது வழக்கம்.

இதேபோல் தனுஷ்கோடி கடற்பகுதிக்கும் வெளிநாடுகளில் இருந்து பிளமிங்கோ பறவைகள் வந்து செல்கின்றன. மேலும், ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவை வாழ்விடமாகக் கொண்ட நீலச்சிறவி பறவைகளும் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கும் வந்து செல்கின்றன.

இதுவே முதல்முறை! - கோத்தகிரிக்கு வந்த பாகிஸ்தானின் `இசபெல்லின் வீட்டியர்' பறவை

நீலச்சிறவி பறவைகள் நவம்பர் முதல் பிப்ரவரி வரை வெளிநாடுகளுக்கு இனப்பெருக்கத்துக்காகப் பறந்து செல்கின்றன. ராமநாதபுரத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு ஒவ்வொரு வருடமும் வலசை வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

பறவைகள் சரணாலயப் பகுதிகளும் பசுமை மிகுந்து காணப்படுகின்றன. இதையடுத்து வெளிநாட்டுப் பறவை இனங்கள் இங்கு வரத் தொடங்கியுள்ளன. அவற்றில் மிகவும் அழகான அரிய வகை பறவையான நீலச்சிறவி பறவைகளும் அதிகளவில் வந்துள்ளன.

ராமநாதபுரம் வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்
ராமநாதபுரம் வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் தலைமையில் வனவர் சந்துரு ராஜா, வனக்காப்பாளர் ஜோசப், வனக் காவலர் செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உப்பூருக்கு அருகில் உள்ள வளமாவூர் கண்மாய் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது கண்மாய் பகுதியில் சந்தேகப்படும் நிலையில் சுற்றித் திரிந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில் அரியவகை பறவையான நீலச்சிறவி பறவைகள் 3 உயிருடனும் ஒன்று இறந்த நிலையிலும் இருந்தது தெரியவந்தது. அவர்கள் பறவைகளை வேட்டையாடி வைத்திருந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த சிறிய வலைகளையும் 4 டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய வன உயிரின காப்பாளர் அசோக்குமார், பறவைகளை வேட்டையாடியவர்களுக்கு அபராதம் விதித்தார். கைப்பற்றப்பட்ட நீலசிறவி பறவைகள் தேர்தங்கல் சரணாலயத்தில் விடப்பட்டன.